நியாய விலைக்கடையை அதிகார துஷ்பிரயோகமாக சீல் வைத்த அதிகாரிகள்.!
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், தமிழ்பாடியை சேர்ந்த இராமசாமி என்பவர் மீனாட்சிபுரம் நியாயவிலைக்கடை விற்பனையாளராக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு துறை தனக்கு வழங்கும் சம்பளத்தில் முறைகேடு உள்ளதாக பலமுறை அரசுக்கும், கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த இராமசாமிக்கு தீர்வு கிடைக்காத நிலையில் அவருக்கான நியாயம் வேண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு செய்து அதற்கான தீர்வை பெற்றுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை கூட்டுறவு சங்க நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தாத நிலையில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி கூட்டுறவு நிர்வாகம் தனக்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என மனு செய்தார். ஆனால் மாவட்ட கூட்டுறவு துறை நிர்வாகம் நியாயவிலை கடை விற்பனையாளரான இராமசாமி மீது காழ்புணர்ச்சியின் காரணமாக திருவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் தலைமையில் 12 கூட்டுறவு சார்பதிவாளர்கள் குழுவாக சென்று அங்கு பணியாற்றி வந்த இராமசாமி என்பவர் மீது பொய்யான அவதூறுகளை பரப்பி நியாயவிலை கடையை சீல் வைத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்பாடி நியாய விலைக்கடை விற்பனையாளரான இராமசாமியிடம் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நாளன்று 07.08.2023 தேதி மாலை குடும்ப விஷயமாக வெளியூர் (இராமநாதபுரம்) சென்றிருந்தபோது மாவட்ட கூட்டுறவு துறையினர் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி நியாய விலைக்கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
மாவட்ட கூட்டுறவு துறையினரின் இந்த நடவடிக்கையின் போது நான் இராமநாதபுரத்தில் இருந்ததால் வர இயலவில்லை. நான் நேரில் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு துறை அலுவலர்களிடம் அவகாசம் கேட்டும் எனது கோரிக்கைக்கு அவர்கள் செவிசாய்க்காமல் எனது நியாயவிலை கடையை சீல் வைத்து விட்டனர் என்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் கூட்டுறவுத்துறை மீது வழக்கு தொடுத்தேன் என்ற காரணத்திற்காக என் மீது எந்த குற்றமும் இல்லாத நிலையில் நான் பணியாற்றும் நியாய விலைக் கடையினை சீல் வைத்திருப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். இதன் மூலமாக என்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டனர். இதனால் நான் பெருத்த அவமானத்துக்கு உள்ளாகி உள்ளேன் என கண்ணீர் மல்க கூறினார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.