பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா ? PART-2
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருகிவரும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யாருமே சிந்தித்தே பார்க்கமுடியாத விதத்தில் விபத்துக்கள் பல்லடத்தில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கினறனர். சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் விபத்துக்களால் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளது.
இதனிடையே பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் யூனியன் அலுவலகம் முன்பாக கோவையில் இருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக எடை மற்றும் நீளத்துடன் அலுமனிய பைப்கள் சுமார் 1600 கிலோ அளவிற்கு ஏற்றிக்கொண்டு பிக் அப் வாகனம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே திடீரென பிக் அப் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த அலுமிய பைப்கள் முன்புறமாக சரிந்து கோவையில் இருந்து மூலனூர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஆடம்பர காரின் பின்புற கண்ணாடி வழியாக காரினுள் புகுந்ததது.
இதனால் கார் பலத்த சேதமடைந்தது. அதுர்ஷ்ட்டவசமாக காரில் பயணித்த இருவர் உயிர் தப்பினர். இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் அதிக பாரம் ஏற்றிவரும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிக பாரம் ஏற்றி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இயக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல்லடம் நகரம் மட்டுமின்றி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து துறையினர் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டால் இது போன்ற விபத்துக்களை தடுக்க வாய்ப்புள்ளது.