5000 கோடி ரூபாய் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி..!
நிதிநிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி வருவதாகக் கூறி பொது மக்களிடம் பலநூறு கோடி ரூபாய் ஏமாற்றிய “நியோ மேக்ஸ்” நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்து, போராட்டம், புகார் என்கிற செய்தி நாள்தோறும் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் திருச்சி, மதுரை, கோவில்பட்டி, பாளையங்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் “நியோ மேக்ஸ்” என்கிற பெயரில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்யும் பணத்திற்கு 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், முதலீடு செய்யும் பணத்தை இரண்டரையாண்டு முதல் மூன்று ஆண்டு காலத்தில் இரட்டிப்பாக திருப்பித் தருவதாக கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி பணத்தை வசூல் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இதுவரை 14 புகார்கள் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ளனர். அவர்களது புகாரின் அடிப்படையில் “நியோ மேக்ஸ்” நிதி நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ரூபாய் 10 லட்சம் முதல் ஒரு கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் பணம் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் மதுரை குற்றப்பிரிவு போலீசார் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், தயாரிப்பாளர் வீரசக்தி உள்ளிட்ட 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், தயாரிப்பாளர் வீரசக்தி, விருதுநகர் தியாகராஜன், நெல்லை பழனிச்சாமி, கோவில்பட்டி நாராயணசாமி, செல்லம்மாள், அருப்புக்கோட்டை மணிவண்ணன், சிவகங்கை அசோக் மேத்தா, தேவகோட்டை சார்லஸ் உள்ளிட்ட பத்துப் பேர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டோர் தரப்பில் பலர் ஆஜராகி முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அரசு வழக்கறிஞர் ஆஜராகி ஐம்பதுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களைத் தொடங்கி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் ஏமாற்றியுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தினால் முதலீடுகள் குறித்த விவரங்களைப் பெற முடியும். ஆகவே இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்த போது “நியோ மேக்ஸ்” நிதி நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் தயாரிப்பாளர் துரை. வீர சக்தி என்பது தெரியவந்தது.
மேலும் பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தில் சினிமா தயாரித்து, அதன் மூலம் பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்து அதை அலுவலகத்தில் போட்டோவாக மாட்டி வைத்து பிரபலங்களே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என நம்பும்படியாக பேசி ஏமாற்றியிருக்கிறார்கள் என்கின்றனர்.
– குண்டூசி