தமிழகம்

24 மணி நேர மணல் கொள்ளை..! : அதிகாரிகளின் அலட்சியம்?

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அப்பகுதி இளைஞர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர் பூலேரிக்காடு பகுதியில் தனியார் நிலங்களில் அரசு அனுமதியின்றி டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு செல்வதாகவும் மணல் கொள்ளையை தடுக்க கோரியும் மாவட்ட ஆட்சிதலைவருக்கு அப்பகுதி இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
புகார் குறித்து விசாரிக்க வேண்டிய அந்தியூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் மணல் திருடும் நபர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கொள்ளையை தடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் தினமும் 100 முதல் 150 டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் திருட்டு எந்த வித அச்சமும் இல்லாமல் இரவு பகலாக நடந்து வருவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நிலத்தின் மேல் பகுதியில் உள்ள வண்டல் மண்ணை செங்கல் சூளைகளுக்கும், அதன் அடியில் உள்ள குறு மணலை கட்டிட கட்டுமானங்களுக்கும் தோண்டிச்செல்வதாக கூறப்படுகின்றது.
சிலரது நிலத்தில் 40 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்படும் மணலை அங்கேயே சல்லடை வைத்து சலித்து வீடு கட்டுமானத்துக்கு ஏற்ற வகையில் டிராக்டரில் ஏற்றி சென்று சப்ளை செய்வதாகவும் இந்த கனிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால், தமிழக டிஜிபிக்கு அனுப்புவதற்கு பதில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகைபட ஆதாரங்களுடன் புகார் அனுப்பி வைத்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்..!
இந்த புகார் மனு காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து, டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில், சொந்த பயன்பாட்டிற்கு என்று தங்களிடம் அனுமதி பெற்ற நிலத்தின் உரிமையாளர்கள் அதனை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

விவசாயி முருகேசன்

மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றி கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்ற விபரீதம் உணர்ந்துதான் ஆறுகளில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை மீறி உள்ளூர் தோட்டாங்களிலிலும் தனியார் நிலங்களிலும் தங்கு தடையின்றி மணல் கொள்ளையை துவங்கி உள்ளனர் மணல் திருடர்கள்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விவசாயியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்புவராயநல்லூர் கிராமம் அருகே கமண்டல நாகநதி ஆற்றில் தச்சராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேட்டு சிவா என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணல் கடத்திச் சென்ற டிராக்டர்களை வழிமறித்து விவசாயி முருகேசன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சேட்டு சிவா சிலருடன் சென்று முருகேசனை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட முருகேசன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உள்ளூர் மக்களின் துணையுடன் இந்தப் பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது மணல் கடத்தலை தட்டிக்கேட்ட நபரை மணல் மாஃபியாக்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக மணல் கடத்தலை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button