அரசியல்

அமைச்சர் – எம்.பி மோதல்… பின்னணி என்ன?

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனிக்கும் அரசு விழாவில் ஏற்பட்ட மோதல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்துள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மேலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி மதியம் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் 2.50 மணிக்கு வந்துவிட்டதால் 2.55 மணியளவில் விழா துவங்கியுள்ளது. சரியாக மூன்று மணிக்கு விழா மேடைக்கு வருகை தந்த எம்பி நவாஸ்கனி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனைப் பார்த்து ஆவேசமாகப் பேச நான் வருவதற்கு முன்னால் நீ எப்படி விழாவைத் துவங்கலாம் என ஒருமையில் பேசி அடிக்கப் பாய்ந்துள்ளார். அருகில் இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் எழுந்து வாயா வந்து உட்காரு, நான்தான் ஆரம்பிக்கச் சொன்னேன். ஏன் கோபப்படுகிறாய் என்று அழைத்திருக்கிறார். உடனடியாக அமைச்சரிடம் வாயா என்று நீ எப்படி என்னை அழைக்கலாம் என சண்டைக்கு பாய்ந்திருக்கிறார் எம்பி நவாஸ்கனி.

இந்த சமயத்தில் தான் மாவட்ட ஆட்சியர் இருவரையும் சமாதானம் செய்ய முயலும் போது எம்பி நவாஸ்கனியின் உதவியாளர் விஜயராமு ஆட்சியரின் மார்பில் தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் மேடையில் இருந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகரன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் தலையிட்டு எம்பி நவாஸ்கனியை சமாதனப்படுத்தி மேடையில் அமரவைத்தள்ளனர். ஆனாலும் சமாதனம் ஆகாத நவாஸ்கனி உடனடியாக அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எர்ணாவூர் நாராயணன் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி கொடி கட்டிய மூன்று வாகனங்களுடன் எம்பி நவாஸ்கனியும் வந்துள்ளார். அவருடன் மேடை ஏறிய ஆதரவாளர்களின் இடுப்பில் துப்பாக்கி இருந்துள்ளது. இதை அறிந்த திமுக நிர்வாகிகள் ஏதோ கலவரம் செய்யும் நோக்கத்தில் தான் எம்பி நவாஸ்கனி வந்துள்ளார் என சுதாரித்து அமைச்சரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பிறகு மாட்டு வண்டி பந்தயத்தை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கும் விழாவிற்கு அமைச்சர் சென்றுள்ளார். அங்கு முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி அமைச்சரை பரிசுகள் வழங்க விடாமல் பிரச்சனை செய்து அங்கிருந்து கிளம்ப வைத்துள்ளார். அமைச்சரும் இன்று நேரம் சரியில்லை. தொடர்ந்து மூன்று நிகழ்ச்சிகளிலும் பிரச்சனையாக உள்ளது எனக் கருதி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியானதும் முதலமைச்சர் விசாரித்திருக்கிறார். அதன்பிறகு தான் எம்பி நவாஸ்கனியின் உதவியாளர் விஜயராமு மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னணி என்ன என திமுக உடன்பிறப்புகளிடம் விசாரித்த போது.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு 2.30 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு வந்துவிட்டார். அங்கு எம்.பி, எம்எல்ஏக்கள் வருவார்கள் வந்ததும் கிளம்பலாம் என காத்திருந்தார். ஆனால் யாரும் வராததால் 2.50 மணிக்கு அங்கிருந்து கிளம்பினார். ஆனால் எம்பி நவாஸ்கனி, இராம்நாட் எம்எல்ஏ முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகிய மூவரும் தனியார் விடுதியில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள். முத்துராமலிங்கம் நவாஸ்கனியை தூண்டி விட்டு பிரச்சனை செய்யச் சொல்லியதால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. தொடர்ந்து அமைச்சரைப் பின் தொடர்ந்து எம்பி தன் சகாக்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு, கலவரம் ஏற்படுமோ என அச்சத்தில் இருந்தோம். ஏதோ நல்ல நேரம். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றனர்.

அரசு விழாவில் நடந்த சம்பவங்கள் அதன் பின்னணியில் யார் யார் இருந்துள்ளார்கள் என அனைத்தும் திமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமையும் ரகசியமாக ரிப்போர்ட் வாங்கியுள்ளது. தவறு செய்தால் நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரித்தும் திருந்தவில்லையே என திமுக தலைவர் கடுமையான கோபத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

– குண்டூசி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button