குஷ்பூவின் சர்ச்சை பேச்சு… இதுதான் பெண்ணுரிமை பேசும் லட்சணமா..?
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சமீபத்தில் ஆவேசமாக திமுகவிற்கு எதிராக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் திராவிட மாடல் பேசி வருகிறார். பெண்களை கேவலமாக பேசுவதுதான் திராவிட மாடலா என கொந்தளித்திருந்தார். நடிகை குஷ்பு அப்போது சில அநாகரீகமான சில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் அவரது கோபம் நியாயமாகப் பார்க்கப்பட்டது.
பின்னர் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து கைதும் செய்யப்பட்டார். அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டதாக திமுக தலைமை அறிவித்தது. இதுசம்பந்தமாக சமூக வலைதளத்தில் குஷ்பு தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். குஷ்பவின் பதவிற்கு ஒருவர் நீங்கள் உங்களின் கணவர் சுந்தர்.சியின் கடனை தீர்ப்பதற்காகத் தானே நீங்கள் பாஜகவுக்கு சென்றீர்கள் என பதிவிட்டுள்ளார். உடனே ஆவேசமான குஷ்பு அடி செருப்பாலே, நீ பிசினஸ் பன்ன உன் வீட்டு பெண்களை பயன்படுத்துவியா? என அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதில் கொடுத்துள்ளார் நடிகை குஷ்பு.
குஷ்புவிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது தான் பெண்களை இழிவு படுத்தக் கூடாது. பெண்களை கேவலமாக பேசுபவர்களை கட்சியில் வைத்துள்ளீர்களே இதுதான் திராவிட மாடலா என ஆவேசமாக நீதி கேட்டு செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, மறுகணமே ஒருவரின் பதிவிற்கு கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆபாசமாக ஒருவரின் குடும்ப பெண்களை வியாபாரத்திற்கு பயன்படுத்துவியா என கேட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வளவு மலிவான வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி கேவலமாக பேசுகிறீர்களே, உங்களை ஒருவர் பேசியது தெருவுக்கு வந்து நீதி கேட்டு செருப்பால் அடிப்பேன் செருப்புக்குத்தான் மரியாதை போயிடும் என ஏதேதோ பேசி கொந்தளிக்கிறீர்களே, நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கு எதிராக இந்த தேசத்தின் பெருமைக்காக பாடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது அந்தப் பெண்களுக்கு ஆதரவாக ஏதாவது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளீர்களா?
பாரதிய ஜனதா கட்சியின் எம்பி ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தபட்டோம். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தும்போது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்தும் கண்டுகொள்ளாமல் பாஜக எம்பிக்கு ஆதரவாக அமைதியாகத்தானே இருந்தீர்கள்? பிரபலமான நடிகை, ஒரு பெண் என்கிற முறையில் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களத்தில் நின்று ஆதரவாக போராடினீர்களா? தனிப்பட்ட முறையில் உங்களை ஒருவர் விமர்சிக்கும் போது மட்டும் உங்களுக்கு பெண்களை இழிவாக பேசுகிறார்கள் என கோபம் வரும். மற்ற பெண்களைத் துன்புறுத்தினால் அமைதியாக இருக்கிறீர்களே? இதுதான் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கான அழகா?
தமிழக பாஜகவில் காயத்ரி ரகுராம் பாதிக்கப்பட்டதாக அவர் பேசும் போதும் அவரிடம் என்ன நடந்தது என ஏதாவது விசாரித்தீர்களா? அல்லது அவருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் ஏதாவது பதிவு செய்தீர்களா? அப்போது அமைதியாக, இருக்கும் இடம் தெரியாமல் தானே இருந்தீர்கள். ஏன் காயத்ரி ரகுராம் பெண் இல்லையா? நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் ஆடியோ, வீடியோ சர்ச்சையில் சிக்கி பெண்கள் கதறினார்களே அப்போதெல்லாம் எங்கே என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
அப்போதெல்லாம் வராத கோபம் உங்கள் கணவரின் கடனை அடைப்பதற்காக நீங்கள் பாஜகவிற்கு போனீர்கள் என கேட்டதும் அநாகரீகமான, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களே, உங்களுக்கும், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? தனிப்பட்ட குஷ்புக்கு பிரச்சனை என்றால் திராவிடம், பெரியாரிசம், பெண்விடுதலை, ஜனநாயகம் பேசும் குஷ்பு, சக பெண்கள் பாதிக்கப்படும் போது அமைதியாகத்தானே இருக்கிறீர்கள். நீங்களே அடுத்த வீட்டு பெண்களைப் பார்த்து இழிவாகப் பேசும் போது, இதுவரை நீங்கள் பெண் போராளியாக பேசியது அனைத்தும் உண்மைக்கு மாறானதுதானே என இந்த சமூகத்தினர் நடிகை குஷ்புவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகை குஷ்புவின் பொதுவாழ்க்கை, போராட்டம் எல்லாம் சுயநலத்திற்காக மட்டுமே. பொதுநலத்திற்காக அல்ல என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பெரும்பாலோனோர் பேசி வருகின்றனர்.
– சூரிகா