பழனியில் 445 கிலோ குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல், மீதி..?.!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில், நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
குபேரபட்டிணத்தில் உள்ள ஸ்ரீ ரங்க செட்டியார் என்பவரின் மகனும் தி.மு.கவின் வார்டு செயலாளர் கோபிநாதன் என்பவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியபோது காவல்துறையினரே அதிர்ச்சியையும் அளவுக்கு குட்கா போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது. அப்போது ரூபாய் 42 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ குட்கா போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வெள்ளையன் தெரு , சேரன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த காளிமுத்து , மணிமாறன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு நான்கு லட்சம் மதிப்புள்ள 410 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கோபிநாதன், காளிமுத்து, மணிமாறன் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களிடம் பேசியபோது… பழனி நகர் முழுவதும் மூன்று நபர்கள் தான் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை விநியோகம் செய்தார்களா ? தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் எப்படி யார் மூலம் நகருக்குள் வருகிறது ? இந்த சோதனை உயர் அதிகாரிகளை திருப்தி படுத்துவதற்காக வெறும் கண்துடைப்பா ? இதுபோன்ற சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி, புனிதத் தலமான பழனி நகரை போதைப்பொருட்கள் இல்லாத நகரமாக மாற்றுவார்களா ? என பல்வேறு கேள்விகளை காவல்துறையினருக்கு முன் வைக்கின்றனர்.