ஸ்ரீரங்கம் மக்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்துவாரா முதலமைச்சர்?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவில் வெள்ளிதிருமுத்தம் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 379 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 வருடங்களாக இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக எந்தவித அனுமதியும் இல்லாமல் வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் என விதிமீறல் கட்டிடங்கள் புதிதுபுதிதாக தோன்றி வருகின்றன. இதனால் பலநூறு கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
இந்தப் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்கள் தங்களது இடங்களை விற்கவோ, புதிதாக இடங்களை வாங்கினாலோ பத்திரப்பதிவு துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளும் கடந்த இருபது வருடங்களாக ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் மறுத்து வந்தனர். மேலும் அவசரத் தேவைகளுக்குக் கூட வங்கிகளில் பத்திரத்தை அடமானம் வைக்கவோ சிதிலமடைந்த வீடுகளை புனரமைப்பு செய்யவோ முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்கிறார்கள்.
இதுசம்பந்தமாக ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும், பத்திரிகையாளருமான எஸ்.என்.மோகன்ராம் நம்மிடம் கூறுகையில், தற்போது தமிழக அரசின் வருவாய்த்துறையின் பயன்பாட்டிலேயே இல்லாத 1930ஆம் ஆண்டு அ.பதிவேட்டின்படி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கப்பட்ட (டைட்டில் டீடு 1027) செப்புபட்டயத்தின் படி கோவிலைச் சுற்றியுள்ள 379 ஏக்கர் நிலமும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தம் என இருபது ஆண்டுகளுக்கு முன் கோவில் நிர்வாகம் பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை போன்ற அரசு அலுவலகங்களில் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1930 ஆண்டு செப்பு பட்டயத்தில் உள்ள சொத்துக்கள், 1963ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் இனாம் ஒழிப்பு சட்டத்தின் படி (30/63) கோவிலுக்குச் சொந்தமான இடத்தை தனியாக பிரித்து கோவிலுக்குச் சொந்தமான இடம் என பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் அப்போது அந்தப் பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு அந்த இடங்கள் அவர்களுக்கே சொந்தம் எனக் கூறி வட்டாட்சியரால் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் வருவாய்த்துறையின் அ.பதிவேட்டில் இனாம் ஒழிப்பு நம்பருடன் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் அவர்களது பெயரிலேயே தனித்தனியாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்போது பட்டா வாங்கியவர்கள், அன்று முதல் இன்று வரை அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் சலுத்தி அங்கேயே வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஸ்ரீ ரங்கம் பெருமாளை வழிபட்டு வருவதோடு, கோவிலைச் சுற்றி பல்வேறு தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் கோவில் நிர்வாகம் (குறிப்பிட்ட சமுதாயத்தினர்) 1963 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு சட்டத்தின்படி ரயத்வாரி பட்டா வழங்கப்பட்டதையும், 1970 ஆம் ஆண்டு அந்த இடங்களில் வசித்தவர்களுக்கு அவர்களது பெயரிலேயே வழங்கப்பட்ட பட்டாவையும் மறைத்து, 1930 ஆம் ஆண்டு செப்பு பட்டயத்தில் குறிப்பிடப்பட்ட 379 ஏக்கர் நிலத்திற்கும் உரிமைகோரி சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பையும் பெற்றுள்ளனர்.
இதனால் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறைகளாக இந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்வதோடு, அறநிலையத்துறை அதிகாரிகள் உரிமைகோரும் 1963ஆம் ஆண்டு காலாவதியான செப்பு பட்டயத்தை ரத்து செய்ய வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில், இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் கடந்த அறுபது ஆண்டுகளாக சட்டவிரோதமாக புதிதுபுதிதாக அனுமதி இல்லாமல் இந்தப் பகுதிகளில் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என பல்வேறு கட்டிடங்களைக் கட்டி, முறையாக அரசுக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தாமல் ஏமாற்றிவரும் கட்டிட உரிமையாளர்கள், மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு முறைகேடாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் பகுதிவாழ் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எது எப்படியோ காலங்காலமாக பல தலைமுறைகளாக இந்தப் பகுதிகளில் வசித்துவரும் மக்களுக்கு அவர்களது பூர்வீக சொத்துகளுக்கு உரிமை கொண்டாட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கையில் இப்பகுதியினர் காத்திருப்பதாக தெரியவருகிறது. ஸ்ரீரங்கம் வாழ் பொதுமக்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்துவாரா முதலமைச்சர்? காத்திருப்போம்.
& சூரிகா