அரசியல்

‘‘குடும்பங்களை சீரழிக்கும் பிக்பாஸ்’’ -முதல்வர் : ‘‘ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்?’’-கமல்ஹாசன்

அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் வேளாண் உள்ளிட்ட துறைகளின் கீழ் 129 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதேபோல், நகராட்சி நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முடிவுற்ற 39 திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

மின்சாரம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரியலூர் மாவட்டத்தில் பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் வழங்க 8 சதவீதம் பேர் மட்டுமே மறுப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குடும்பங்களை சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசனால், மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது என்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் கட்சி தொடங்கினால் எப்படி இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது? கமல் நல்லது செய்வதாக தெரியவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ட்விட்டரில் பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், முதலமைச்சரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் அதிமுகவை கமல்ஹாசன் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
அதேநேரம், இதுவரை தாங்கள் எழுப்பிய எந்த அரசியல் கேள்விகளுக்கும் பதில் சொல்லாதவர்கள், விமர்சனம் செய்ய மட்டுமே முன்வருவதாக மக்கள் நீதி மய்யம் இளைஞரணி செயலாளர் சினேகன் கூறியுள்ளார்.. திமுக கூட்டணிக்கு கமல் செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாலேயே, அவரை, முதல்வர் காட்டமாக விமர்சித்து வருகிறார் என்று பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் கமல்ஹாசனை முதல்வர் நேரடியாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போதும் மீண்டும் நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன் என பதிவிட்டுள்ளார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button