ஏழை மாணவனின் 4500 கிலோமீட்டர் எழுச்சிமிகு சைக்கிள் பயணம் !
எனக்கு சின்ன வயசில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம். என்னோட சித்தி எனக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க, அத எடுத்துட்டு திருப்பூரில் இருந்து கிளம்பி 4500 கிலோ மீட்டர் சென்று லடாக் சென்று நமது நாட்டின் தேசிய கொடியை ஏற்றிவிட்டேன் – பல்லடம் கல்லூரி மாணவன் நவீன்குமாரின் சாதனை பேசுபொருளாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது அருள்புரம். இங்கு வசித்துவரும் பாலு, மேனகா தம்பதியரின் மகன் நவீன் குமார் (18), இவர் தனியார் கல்லூரியில் விக்ஷூவல் கம்யூனிகேசன் முதலாம் ஆண்டு மாணவன். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி திருப்பூரில் இருந்து சைக்கிள் பயணத்தை நவீன்குமார் துவங்கியுள்ளார். தனது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கூறிவிட்டு ரூ. 1000 மட்டும் பெற்றோரிடம் வாங்கிகொண்டு கிளம்பிய நவீன் சேலம், ஒசூர் வழியாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, நாக்பூர், மகாரஷ்ட்ரா, மத்யபிரதேஷ், கான்பூர், டெல்லி, ஹர்யானா, பஞ்சாப், ஹிமாச்சல், ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்களை சுமார் 78 நாட்கள் கடந்து லடாக் லேய் சென்று வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து திரும்பியுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தி எந்த விளம்பரமும் இன்றி சைக்கிள் பயணம் செய்த மாணவன் நவீன்குமார் தனது பயணம் குறித்து விவரித்தபோது மெய்சிர்க்க வைத்தது. தனது பயணத்தின் போது காலை 7 மணிக்கு கிளம்பி இரவு வரை சுமார் 80 கிலோமீட்டர் வரை கடந்ததாகவும், இரவு நேரங்களில் பெட்ரோல் பங்கில் தற்காலிக டெண்ட் அமைத்து தங்கி விட்டு பயணத்தை தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும் வட மாநிலங்களில் பயணம் செய்யும் போது மொழிப்பிரச்சனை இருந்ததாகவும், கையுறை, ஸ்வெட்டர் போன்றவை வெளியூர் சென்ற பிறகுத்தான் வாங்கியதாகவும், சாப்பிடுவதற்கு கூகுள் இணையத்தின் மூலம் உணவை காட்டி சப்பாத்தி போன்ற உணவுகளை வாங்கி சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியை நள்ளிரவில் கடக்கவேண்டிய சூழல் உருவான போது அச்சத்துடன் பயணம் செய்து கடந்ததாக தெரிவித்தார். மேலும் குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவில் சிக்கி மீண்டுவந்ததாகவும் தெரிவித்தார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நவீனின் துணிச்சலான பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து உதவி செய்ததாகவும் தெரிவித்தார். தான் பாக்கிஸ்தான் மற்றுன் சீனா செல்ல அனுமதி கேட்டபோது பாஸ்போர்ட் கேட்டதாகவும், இருந்தால் சென்றிருப்பேன் என வெகுளியாக கூறினார். தனது சைக்கிள் பயணத்தின் போது தனக்கு ரூ. 58 ஆயிரம் செலவானதாகவும், தனது தந்தையும், தாயும் பணம் அனுப்பி ஊக்குவித்ததாகவும் தெரிவித்தார்.
ஏழை மாணவன் எந்த வித விளம்பரமும் இன்றி சித்தி வாங்கி கொடுத்த புது சைக்கிளை எடுத்துக்கொண்டு சுமார் 4500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தனது இலட்சிய பயணத்தை முடித்துள்ளார். இது சாத்தியமா? என கேட்கும் அளவிற்கு இளைஞர்களின் லட்சியத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து துணிச்சலான சைக்கிள் பயணம் வரலாற்று சரித்திரப்பயணம் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பாக சாதனையாளர்களை ஊக்குவிக்க ஏராளமானோர் முன்வரும் நிலையில் நவீன்குமாரின் பயணத்தை பாராட்டலாமே.