சினிமா

துணைத் தலைவர் பதவிக்கு 2 கோடி !.? அணி மாறிய மைக்கேல் ராயப்பன்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில மாதங்களாக சங்கத்தின் சட்டதிட்டங்களில் மாற்றங்கள் செய்தது சம்பந்தமாக வழக்குகள், வழக்குகளை காரணம் காட்டி பதவிக்காலம் முடிந்தும், இதே நிர்வாகிகள் சங்கத்தை நிர்வகித்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் என சர்ச்சைகள் நிறைந்த சங்கமாக மாறியிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

இது சம்பந்தமாக விசாரித்தபோது… இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் முரளி தலைமையில் ஒரு அணியும், மன்னன் தலைமையில் ஒரு அணியும், போட்டியிடுகின்றனர். முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இதேபோல் மன்னன் தலைமையிலான அணியில் மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் திடீரென மைக்கேல் ராயப்பன் முரளியைச் சந்தித்து அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் வெற்றிபெறுவதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை எத்தனை அணிகள் போட்டியிட்டாலும், இறுதிவரை அதே அணியில் தான் தேர்தலைச் சந்திப்பார்களே தவிர இதுபோன்று குதிரை பேரம் பேசி ஆட்களைத் தூக்கியதில்லை என்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் கார்பரேட் நிறுவனத்தினர். இவர்கள் ஏன் திடீரென தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால், முரளியும், வி. கிரியேஷன்ஸ் தாணுவும் தற்போது கடனில் தத்தளித்து வருகிறார்களாம். ஆகையால் கார்பரேட் நிறுவனங்களில் பலகோடி கடன் பெறும் நோக்கத்தில் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் இருவருக்கும் பதவி ஆசையைத் தூண்டி தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் வெற்றிபெற வைக்கிறோம் என வாக்குறுதி அளித்து அழைத்து வந்தார்களாம்.

ஆனால் இருவரது எண்ணத்திற்கு மாறாக மன்னன் அணியில் மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் பலமான வேட்பாளர்களாக பேசப்பட்டதால் ஒருவார காலமாக முரளி மிகவும் மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகினாராம். அப்போது தாணு முரளியை சமாதானம் செய்து மன்னன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மைக்கேல் ராயப்பனை தேர்தலில்  இருந்து விலகிக் கொள்ள குதிரை பேரம் பேசுமாறு ஆலோசனை வழங்கினாராம். அதன்படி இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சந்திரபோஸை மைக்கேல் ராயப்பனிடம் பேரம்பேசி அழைத்து வருமாறு நியமித்திருக்கிறார்கள்.

மைக்கேல் ராயப்பன் முரளியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தபோது…

மைக்கேல் ராயப்பனை வாபஸ் வாங்க வைப்பதற்காக கார்பரேட் நிறுவனத்தினரிடம் சில கோடிகளைப் பெற்றுக்கொண்டு மைக்கேல் ராயப்பனுக்கு இரண்டு கோடியை மட்டும்  கொடுத்துவிட்டு மீதியை இருவரும் பங்கு போட்டுக் கொண்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகிறார்கள். அரசியலில் சுயலாபத்துக்காக அணி மாறிய மைக்கேல் ராயப்பன் சங்கத்தில் அணிமாறியது ஒன்றும் புதிதல்ல எனவும் பேசி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களிடம் தேதியை பெற்று மற்ற தயாரிப்பாளர்களுக்கு சிரமத்தை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை அழித்தவர்தான் தாணு. இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைப்பதற்காக முரளியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.

முரளியின் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர் எஸ்.ஏ. சூர்யா தனக்கு தரவேண்டிய நான்கு கோடி பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாகவும், அவரிடம் பணத்தை பெற்றுத் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளரின் புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பேரம் பேசியதோடு கட்டப்பஞ்சாயத்து செய்தாராம் முரளி. மேலும் தமிழ்க்குமரனின் படத்திற்காக விதிகளை மீறி இரவு 11 மணிக்கு சங்கத்தைத் திறந்து சென்சார் கடிதத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளாராம் முரளி.

தற்போது தாணு, முரளி கூட்டணி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பல கோடிகளைப் பெற்று பரிவர்த்தனை செய்வதற்காகத்தான் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் ஆகிய இருவருக்காக மைக்கேல் ராயப்பனை குதிரை பேரம் பேசி அழைத்து வந்திருக்கிறார்கள் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.

இது சம்பந்தமாக தாணுவும், முரளியும் விளக்கம் அளித்தால் அந்த செய்தியை வெளியிட தயாராக உள்ளோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button