திருப்பூரில் தலைதூக்கும் கொலைவெறி தாக்குதல் !
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான மாவட்டங்களாகும். மேலும் கோவையில் இருந்து திருப்பூருக்கு பல்லடம் வழியாக அதிக அளவில் தனியார் மற்றும் அரசுப்பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை முதல் இரவு வரை பேருந்துக்களில் பயணிகள் கூட்டம் அலைமோதிக்காணப்படுவது வழக்கம். மேலும் நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பேருந்துக்களை பயண்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்துக்களில் பயணிகளை பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தரக்குறைவாக நடத்துவதாக புகார்கள் அதிக அளவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் சாலையில் அதிவேகமாக தனியார் பேருந்துக்கள் ஓட்டப்படுவதால் சாலையில் செல்வோர் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது உரசியதாக கூறப்படுகிறது.
மேலும் வயதான பெண்மணியுடன் வந்த இளைஞருக்கும் தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி பேருந்து நடத்துநர் ஓட்டுநர் என மூன்று பேர் சேர்ந்து இளைஞரை பிடித்து கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் வயதான பெண்மணி இளைஞரை காப்பாற்ற் போராடுவது அனைவரையும் அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக நடந்துள்ளது. மேலும் காவல் சோதனை சாவடி இருந்தும் எந்த தைரியத்தில் இது போன்று தாக்குதலில் ஈடுபடுகின்றனர். மேலும் இதே போன்று பல்லடத்தில் இரு தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே நேரப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி பாபு என்கிற ஓட்டுநர் தாக்குதலில் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து பாபுவை தாக்கிய ஓட்டுநர் ஆப்பிரகாம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவேண்டிய தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தெருவில் இறங்கி கொலைவெறி தாக்குதலில் இறங்குவது சட்டத்திற்கும் காவல்துறைக்கும் சவால் விடுவது போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது போன்று செயல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மீது கடும் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.