விரக்தியில் விஷால்… விலகும் நண்பர்கள்..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பிரபல நடிகருமான விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான லத்தி திரைப்படத்தை அவரது நண்பர்களாக அவருடன் இருந்து வந்த நடிகர்கள் நந்தா, ரமணா பெயரில் தயாரித்திருந்தார். படம் வெளியான இரண்டு நாட்களில் திரையரங்கிற்கு ஆட்கள் வராததால் பல இடங்களில் படம் தூக்கப்பட்டது. இருந்தாலும் படத்தின் வியாபாரம் லாபகரமான முடிந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன் விஷால் நடிகர் நந்தா மற்றும் ரமணா இருவரிடமும் படத்தின் வியாபாரம் சம்பந்தமாக கணக்கு கேட்டு பேசும்போது மூவருக்குள் வாக்குவாதம் பெரிதாகி நந்தா மற்றும் ரமணாவை கேவலமாக வசைபாடியிருக்கிறார்.
கணக்கில் பத்துக்கோடி பற்றாக்குறை ஏற்பட்டதாக கேட்டபோது உன்னுடன் இவ்வளவு நாட்களாக நாங்கள் இருந்ததற்கு இருவரும் தலா ஐந்துகோடி எடுத்துக் கொண்டோம் என்று கூலாக கூறி வெளியே சென்று விட்டார்களாம். இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற விஷால் சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் தன்னிலை மறந்து வீட்டிற்குள்ளேயே கிடக்கிறாராம். ஒருநாள் விரக்தியின் உச்சத்திற்குச் சென்று சுவரில் மோதி நெற்றியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாம்.
இது சம்பந்தமாக விஷால் தரப்பில் விசாரித்தபோது, மகாலிங்கபுரத்தில் உள்ள விஷாலின் அலுவலகத்திற்கு விஷால் வருவதில்லை. அந்த அலுவலகத்தில் நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் தான் இருக்கிறார்கள். விஷாலின் அந்தரங்க ரகசியங்கள் அனைத்தும் ரமணாவுக்கு நன்கு தெரியும் என்பதால் உடனே இவர்களை ஒதுக்கிவிட முடியாத நிலையில் விஷால் தவித்து வருகிறார். ஏற்கனவே நடிகர் சங்கத்திலிருந்து விஷாலை ஓரங்கட்டி வைத்துள்ளனர். நடிகர் சங்க நிர்வாகத்தை நடிகர் நாசர், நடிகர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் மட்டும்தான் கவனித்து வருகின்றனர். நடிகர் சங்கத்தின் மேலாளராக இருந்த பாலமுருகன் தற்போது ஐசரி கணேஷிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்ற போது விஷால் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ஒரு அணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டார். அந்த அணிக்கு விஷாலிடம் தோல்வியடைந்த நடிகர் ராதாரவி ஆலோசகராக இருந்ததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தச்சொல்லி ஐசரி கணேஷ் நீதிமன்றம் சென்றார். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு விஷால் அணி வெற்றி பெற்றது. இடைப்பட்ட காலத்தில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியதோடு மாதந்தோறும் உதவித் தொகையையும் நிறுத்தாமல் வழங்கினார் ஐசரிகணேஷ். நடிகர் விஷால் நியமித்த மேலாளர் விஷாலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தற்போது அவரும் அணிமாறிவிட்டார்.
ஏற்கனவே விஷால் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படமும் வியாபார ரீதியில் விஷாலுக்கு வசூலைத் தேடித்தந்தது. அப்போதும் ரமணாவின் தூண்டுதலால் மிஷ்கினை வெளியே அனுப்பிவிட்டு துப்பறிவாளன் 2 படத்திற்கு விஷாலே இயக்குனராக மாறினார். அந்த சமயம் இயக்குனர் மிஷ்கின் ஒரு விழாவில் அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு ஆட்டம் போடும் விஷால் ஒருநாள் யாரும் இல்லாமல் தன்னந்தனியாக தெருவில் நிற்கப்போகிறார் என்றார். அதேபோல் இன்று விஷாலுடன் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்று வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கும் விஷாலுக்கும் இளம் வயது முதல் நட்பு. இவர்களின் நட்பு லத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரை தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல இடங்களில் உதயநிதியின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார். இவருக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த சமயத்தில் உதயநிதியின் பெயரைச்சொல்லி மிரட்டியும் இருக்கிறார். வீரமே வாகைசூடவா படம் வெளியான சமயத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிர்வாகி செண்பகமூர்த்தியிடமும் தெனாவட்டாக பேசியிருக்கிறார். லைகா நிறுவனத்திற்கு விஷால் தரவேண்டிய 21 கோடியே 90 லட்சம் ரூபாயை கேட்டபோதும் தமிழ்குமரனிடம் உதயநிதி பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இதையெல்லாம் தற்போது நடிகர் விஷாலிடம் விலகியிருக்கும் அவரது நண்பர்கள் உதயநிதியிடம் உங்கள் பெயரைப் பயன்படுத்தித்தான் விஷால் பல நேரங்களில் காரியம் சாதித்து வருகிறார். மேலும் நீங்கள் விஷாலுக்காக குருவி படத்தை தயாரிக்க முன்வந்த போது உங்கள் நிறுவனம் புதுநிறுவனம் என்று அப்போது உங்களை மதிக்காமல் உதாசீனப்படுத்தினார் என்ற உதயநிதியிடம் கூறி அவரை உசுப்பேத்தியதாக கூறுகிறார்கள்.
அதன்பிறகு உதயநிதி விஷாலை அழைத்து இனிமேல் உனது சுயநலத்திற்காக எனது பெயரை எங்கும் பயன்படுத்தாதே! என்று பேசியதாகவும் கூறுகிறார்கள். லத்தி படத்திற்கு ஏழுகோடி செலவு செய்து 25 கோடிக்கு வியாபாரம் பார்த்து விட்டோம் என்கிற சந்தோஷத்தில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்புக்கு லண்டன் செல்ல தீர்மானித்திருந்த சமயத்தில் அடுத்தடுத்து அடிமேல் அடி விழுகிறதே என்கிற விரக்தியிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறாராம் விஷால்.
மேலும் விஷால் தன்னுடன் இருப்பவர்களை சம்பாதிக்க விடாமல் அவர் மட்டுமே சம்பாதித்து அனைவரும் அவரை எதிர்பார்த்து இருக்க வேண்டும் என நினைப்பாராம். இந்த எண்ணத்தால் தான் இன்று உண்மையான நண்பர்கள் யாரும் விஷாலிடம் இல்லை. நிரந்தரமான பணியாளர்களும் அவரிடம் இருப்பதில்லை என்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது நடிகர் விஷாலுக்கு உண்மையான நண்பர்கள் யாருமே இல்லையா? அல்லது கூடா நட்பு கேடாய் முடிந்ததா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் தான் விளக்கம் அளித்து மேற்கூறிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள்.
– சூரியன்