அரசியல்இந்தியா

தப்லீக் ஜமாத்தினர் மீது அவதூறு பரப்பிய அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் – : மமக தலைவர் ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, “இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாத்தினர்தான் இந்தியாவில் கொரோனாவைப் பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு பரப்பப்பட்டது.

வெறுப்புப் பரப்புரையுடன் நிற்காமல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில், இந்தியாவிற்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் வந்திருந்த 950க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்திலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் 12 பெண்கள் உட்பட 129 தப்லீக் ஜமாத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சூழலில், பெரும்பாலான வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் தமது தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிறையிலிருந்த காலம் தண்டனை காலமாகக் கருதப்பட்டு, அதற்கு மேல் அபராதமும் செலுத்தி தம் வழக்கை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினர். இவர்களில் 44 வெளிநாட்டினர் மட்டும் தம் மீது சுமத்தப்பட்ட வழக்கை எதிர்த்து வழக்காடினர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், இவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார்.

இவ்வாறு விடுதலைச் செய்யப்பட்ட 8 வெளிநாட்டினர் மீது பூர்வாங்க ஆதாரம் இல்லை என்றும் எஞ்சிய 36 நபர்கள் மீது கொரோனாவைப் பரப்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணையில் தெரியவருவதாகவும் குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள தப்லீக் தலைமையகம்தான் கொரோனாவைப் பரப்பிய மையம் என்று வர்ணிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர்கூட குறிப்பிட்ட அந்த காலத்தில் அங்கு இருக்கவில்லை என்றும், இவர்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்தான் இவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டார்கள் என்றும் டெல்லி தலைமை குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதோடு, மோடி அரசிற்குத் தனது தீர்ப்பில் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இதேபோல், மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அமர்வு, கொரோனா பரவல் தொடர்பாக வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டபோது, அரசியல் காரணங்களுக்காக கொரோனா பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டது.

சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தனது வெறுப்புணர்வின் காரணமாக, வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவைப் பரப்பினார்கள் என்று அவதூறு பரப்பி அவர்களை 6 மாதங்களுக்கு மேலாக தமது தாய்நாட்டிற்குத் திரும்பவிடாமல் சிறையில் அடைத்து, பன்னாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைச் சீர்குலைத்தமைக்காக பிரதமர் மோடி தப்லீக் ஜமாத்தினரிடமும் சம்பந்தப்பட்ட நாடுகளிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்களை இந்தியாவிற்குள் மீண்டும் வருவதற்குப் பிறப்பிக்கப்பட்ட தடை ஆணையை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மோடி அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து தமிழகத்திற்கு விருந்தினராக வந்த 129 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரைக் கைது செய்து சிறையில் அடைத்து பெரும் துன்பத்தையும் அளித்த தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வியகத்தில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக வந்துள்ள தகவல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐ.ஐ.டி.களை உயர்தகுதி மிக்க கல்வி நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ள குழு ஒன்று பரிந்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும் நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சர் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெரும் முயற்சியால் அரசு நிறுவனமாக உருவாக்கப்பட்டவை ஐ.ஐ.டி.க்கள். நாட்டின் தலைசிறந்த நிறுவனமாக இன்று ஐ.ஐ.டி.க்கள் உயர்ந்துள்ளதற்கு ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது எவ்வகையிலும் தடையாக இருக்கவில்லை. இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐ.ஐ.டி.யின் ஏராளமான பேராசிரியர்கள் தமது துறையில் உலகம் போற்றும் சாதனைகளைப் படைத்துள்ளார்கள்.

எடுத்துக்காட்டாக சென்னை ஐ,ஐ.டி.யின் கணித துறையில் பணியாற்றிய முனைவர் வசந்தா கந்தசாமி உலகம் போற்றும் கணித பேராசிரியராக திகழ்கிறார்.

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சரவை இந்த பரிந்துரையைச் செய்துள்ளது. இப்போது ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழிக்க முனையும் பாஜக, நாளை மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டை ஒழிக்க முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூத்தினருக்கும் எதிரான பாஜகவின் இந்த சமூக நீதி விரோத கொள்கையை முறியடிக்க சமூக நீதியில் நாட்டம் உள்ள அனைவரும் ஒன்றுசேர்வது காலத்தின் கட்டாயமாகும்.”

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரபீக்அகமது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button