பல்லடத்தில் நள்ளிரவு முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டமா .?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்லடத்தில் வசித்துவரும் விவசாயி தனது விவசாய நிலங்களுக்கும், வீட்டு பாதுகாப்பிற்காகவும் சிசி டிவி கேமராவை பொருத்தியுள்ளார். இதனிடையே கடந்த இரண்டு நாட்கள் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் சிசி டிவி கேமரா செயல்படவில்லை.
இதனிடையே சிசி டிவி கேமராவை ஆய்வு செய்ததில் கேமராவின் வயர் துண்டிக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை கண்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தார் பதிவுகளை பார்த்தபோது கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் தெண்ணந்தோப்பில் இருந்து முகமூடி அணிந்த நபர் விவசாயியின் வீட்டை நோட்ட மிட்டபடி பூனை போல நடந்து சென்று சிசி டிவி கேமராவின் வயர்களை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த நாய் குரைத்ததால் அங்கிருந்து முகமூடி அணிந்த கொள்ளையன் தப்பிச்சென்றுள்ளான். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, வீட்டில் கொள்ளையடிக்க நோட்டமிட்டு கும்பலாக முகமூடி கொள்ளையர்கள் திட்டம் தீட்டி முன்னோட்டமாக ஒருவனை மட்டும் நோட்டமிட அனுப்பினரா? என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பல்லடத்தில் நள்ளிரவு முகமூடிக் கொள்ளையர்கள் நடமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.