சினிமா

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்.. : ஆர்.கே.செல்வமணி ஒதுங்குகிறாரா..? ஒதுக்கப்படுகிறாரா..? பரபரக்கும் தேர்தல்…

திரையுலகில் பாரம்பரியம் மிக்க சங்கமாக தொழிற்சங்கங்களின் தலைமை சங்கமான தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் திகழ்ந்து வருகிறது. தற்போது அதன் தலைவராக பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இருந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது வழக்கம். அதேபோல் தற்போது சங்கத்தை நிர்வகித்து வரும் செல்வமணியின் தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் 23 சங்கங்களின் நிர்வாகிகள் தலா 3 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

இந்த தேர்தல் சம்பந்தமாக தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான அக்னி ராமச்சந்திரன் நம்மிடம் கூறுகையில்..

தமிழ்த் திரையுலகில் சக்திவாய்ந்த அமைப்பாக திகழ்ந்து கொண்டிருந்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் தற்போது தொழிற்சங்கமா? அல்லது கார்பரேட் சங்கமா? என்று எண்ணுகிற அளவிற்கு மாறிக்கொண்டு வருகிறது என பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் புலம்பி வருகின்றனர். தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்து வந்தார்கள்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிப்படங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே தனித்தனியாக சங்கங்கள் ஆரம்பித்து தொழில் செய்து வருகிறார்கள். அந்தந்த மாநில மொழியை அடைமொழியாக வைத்து தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படத் தொழிலாளர்கள் சங்கங்கள் ஆரம்பித்து செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் என்று மாற்றாமல் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் என்று தொடர்ந்து செயல்பட்டு வருவது எந்த வகையில் நியாயம் என புலம்பி வருகிறார்கள்.

ஏனென்றால் தமிழ்நாட்டிலிருந்து திரைப்படத் தொழிலாளர்கள் ஆந்திராவிற்கு படப்பிடிப்புக்காகச் சென்றால் அந்த மாநிலத் தொழிலாளர்கள் நமது மாநிலத் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அந்த மாநில தொழிற்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் மட்டும்தான் பணிபுரிய அனுமதிக்கிறார்கள். இவ்வளவுக்கும் நமது மாநில தொழிலாளர்கள் தலைவர் செல்வமணியின் மனைவி ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். நான்கு மாநில மொழித் தொழிலாளர்களுக்கும் தலைவராக தன்னை காட்டிக் கொள்ளும் செல்வமணி தனது மனைவி அமைச்சராக இருக்கும் மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ் திரைப்படத் தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் பணிபுரிய அனுமதி வாங்கி தர முடியவில்லையே! இவரா மற்ற மாநிலங்களில் நமது மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதி வாங்கித் தரப்போகிறார். ஆகையினால் தொழிலாளர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லாத தென்னிந்திய என்கிற பெயரை மாற்றி தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் என உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி தலைவராக வந்த பிறகு, சென்னை வடபழனியில் இயங்கி வரும் தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகம் தற்போது கார்பரேட் அலுவலகமாக மாறிவருகிறது. தொழிற்சங்கத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கார்கள் வாகன நிறுத்துமிடத்தை தினசரி ஆக்கிரமித்து வருகின்றன. படப்பிடிப்புக்குச் செல்லும் தொழிலாளர்களின் இருசக்கர வாகனங்கள் அலுவலகத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் அணிவகுத்து நிற்பதை அன்றாடம் பார்க்கலாம். ஒரு தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர் தலைவராக இல்லாமல் அமைச்சரின் கணவரும் கோடீஸ்வரருமான செல்வமணி தலைவராக இருக்கும் போது பணக்காரர்களின் கார்கள் அலுவலகத்திற்கு உள்ளேயும், தொழிலாளர்களின் இரண்டு சக்கர வாகனங்கள் சாலை ஓரத்திலும் தானே நிற்கும்!

காலங்காலமாக சம்மேளனத் தலைவர்களாக இருந்தவர்கள் எல்லோரும் மாநிலத்தில் ஆளும் அரசாங்கத்தோடு நட்புறவுடன் செயல்பட்டு திரைப்படத் தொழிலாளர்களுக்கு எவ்வளவோ நலத்திட்டங்கள் பெற்றுத் தந்திருக்கிறார்கள். கடந்த 2006-2011 ல் திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக மகாபலிபுரம் அருகே பையனூரில் இடம் வழங்கினார். செல்வமணி தலைவராக வந்தபிறகு எடப்பாடி பழனிச்சாமியிடம் அந்த இடத்தைக் காண்பித்து கிட்டத்தட்ட 12 கோடிக்கு மேல் வாங்கிக் கொண்டு ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடத்திற்கு வர்ணம்பூசி அம்மா வளாகம் என பெயர் வைத்து பழனிச்சாமியை வைத்து திறப்பு விழா நடத்தி கணக்கு காண்பித்துவிட்டார். இன்று வரை தொழிலாளர்களுக்கு வீடும் வரவில்லை. இடமும் வழங்கவில்லை. கலைஞர் கொடுத்த இடம் அப்படியே தான் இருக்கிறது.

25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தலைவர் என சொல்லிக் கொள்ளும் செல்வமணி 25 ஆயிரம் தொழிலாளர்கள் யார் யார் என பெயர் பட்டியலைத் தருவாரா? வருடம் தோறும் மே தினம், ஒருமைப்பாட்டு தினம் கூட்டங்கள் நடைபெறும் நாளில் 400 முதல் 500 நபர்கள் கலந்து கொள்வார்கள் என காவல்நிலையத்தில் கடிதம் கொடுத்து அனுமதி கேட்கிறார்கள். அதற்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை தொழிலாளர்களின் பணத்தை நன்கொடையாக காவல்நிலையத்திற்கு கொடுத்துதான் அனுமதியும் வாங்குகிறார்கள். சம்மேளன செலவு கணக்கில் பார்த்தாலே தெரியும். 25 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கும் அமைப்பில் வெறும் 400 உறுப்பினர்கள் மட்டும் வருவார்கள் என எதை வைத்து செல்வமணி முடிவு செய்கிறார். இவருக்கு கட்டுப்பட்டு இவர்கள் மட்டும்தான் வருவார்கள் என நினைக்கிறாரா?

தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையில் இதுவரை முதலமைச்சரைச் சந்தித்து தொழிலாளர்களுக்காக கோரிக்கை ஏதாவது வைத்துள்ளாரா? இவரது லட்சணம் தெரிந்ததால் இவர் பலமுறை முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டும் முதல்வர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முதல்வரைச் சந்திக்க அனுமதி வாங்கிய போது அவருடன் ஒரு முறையும், மனைவி ரோஜாவுடன் ஒரு முறையும் முதல்வரைச் சந்தித்தார். அப்போது கூட முதல்வர் இவருடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. இந்நிலையில் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பழனிச்சாமியை நிர்வாகிகளுடன் சந்தித்து வருகிறார். இன்று இருக்கும் நிலையில் பழனிச்சாமியை சந்தித்தால் தொழிலாளர்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்து விடுமா என்ன?

மேலும் செல்வமணிக்கு ஒத்துவராத சங்கங்களை இரண்டாகப் பிரித்து அவர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதையே வாடிக்கையாகவும் செய்துவருகிறார். ஏற்கனவே டெக்னீசியன் சங்கத்தை இரண்டாகப் பிரித்தார். தற்போது சண்டைப் பயிற்சியாளர்கள் சங்கத்தில் உள்ள ஜிம்பாய்ஸ்-&ஐ தனியாக இயங்க வலியுறுத்தி வருகிறார். இதேபோல் போட்டோ பிளட் சங்கத்தையும் கையாள்கிறார்.

தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு தொழிலாளர்கள் அல்லாத செல்வமணி தலைவராக வந்தததற்குப் பிறகு சம்மேளனமும், திரைப்படத் தொழிலாளர்களும் எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை. தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பும், எந்தவித பயன்பாடுகளும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்மேளனத்திற்கு செல்வமணியின் தலைமை தேவைதானா? என்கிற கேள்வி எழுகிறது. ஆகையால் வருகிற தேர்தலில் செல்வமணியைத் தவிர்த்து மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் தொழிற்சங்கத்திற்கு தலைவராக வந்தால் தொழிலாளர்களுக்காக உழைப்பார்கள் என தொழிலாளர்கள் எண்ணுகிறார்கள் என்றார்.

ஆகையால் வருகிற தேர்தலில் செல்வமணியைத் தவிர்த்து மற்ற சங்கங்களின் நிர்வாகிகளில் யாராவது தலைவராக வரவேண்டும் என்பதே ஒட்டு மொத்த தொழிலாளர்களின் கோரிக்கையாக தெரிய வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா செல்வமணி? காத்திருப்போம்.

அக்னி ராமச்சந்திரனின் குற்றச்சாட்டுகள் குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளரும், திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் செயலாளருமான சாமிநாதனிடம் கேட்டபோது.. அக்னி ராமச்சந்திரன் என்பவர் நீண்டகாலமாக எங்கள் மீது சிலரின் தூண்டுதலால் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார். அவர் இரண்டு, மூன்று சங்கங்களில் உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் எந்த வேலையும் செய்வதில்லை. நாட்டில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் பிரபலங்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு சுயவிளம்பரம் தேடிக்கொள்வது மட்டுமே அவரது தொழில் என்று முடித்துக் கொண்டார்.

குண்டூசி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button