ரூ 11.5 கோடி கடன்கார தரணி சர்க்கரை ஆலை… கலெக்டர் அதிரடி அறிவிப்பு
கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 11 கோடியே 50 லட்சம் நிலுவை தொகையை கொடுக்காமல் கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வரும் தரணி சர்க்கரை ஆலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க போவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுக்காமல், உறவினரின் பரிந்துரையால் காரியம் சாதித்த பிஜிபி குழுமத்தின் தலைவர் பழனி ஜி பெரியசாமிக்கு சொந்தமானது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கரைபூண்டி கிராமத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை..!
இந்த சர்க்கரை ஆலை கடந்த நிதிஆண்டில் 539 கோடியே 87 லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டி உள்ளது. நிகரலாபமாக மட்டும் 80 கோடியே 16 லட்சத்தை தரணி சர்க்கரை ஆலை ஈட்டியதாக பழனி ஜி பெரியசாமி ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தரணி சர்க்கரை ஆலையில் வருமான நிலவரம் லாபகரமாக இருக்க 2017 ஆம் ஆண்டு கரும்பு கொள்முதல் செய்தவகையில், கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகையான 11 கோடியே 50 லட்சம் ரூபாயை இதுவரை கொடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 8 மாதங்களாக நிலுவை தொகையை கேட்டு விவசாயிகள் தரணி சர்க்கரை ஆலைக்கு நடையாய் நடந்து ஏமாந்த விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தரணி சர்க்கரை ஆலைக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க பல முறை உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகின்றது.
பல நூறு கோடிகளுக்கு அதிபதியான பழனி ஜி பெரியசாமி , 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு 11 கோடியே 50 லட்சத்தை கொடுக்க இயலாத கடன்காரராகவே இன்றுவரை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இத்தனைக்கும் பிஜிபி குமத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற 7 கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களோ, பிஜிபி குழுமத்தின் சென்னை கிண்டி மற்றும் கோவையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டல்களில் தங்கிச்செல்லும் சுற்றுலா பயணிகளோ கடன் வைத்து செல்வதில்லை. கடனை பிஜிபி குழுமம் அனுமதிப்பதில்லை என்று சுட்டிக்காட்டும் விவசாயிகள் மழை… வெயில்.. பாராமல் உழைத்து கரும்பை விளைவித்து தரணி சர்க்கரை ஆலைக்கு அறுவடை செய்து கொடுத்து விட்டு 8 மாதம் கடந்தும் பணம் தராமல் இழுத்தடிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பு கின்றனர்.
இந்த நிலையில் தங்களின் துயரம் குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியிடம் கரும்பு விவசாயிகள் மீண்டும் புகார் அளித்தனர். விவசாயிகளின் நிலை கண்டு கலங்கிபோன கலெக்டர் கந்தசாமி, விவசாயிகளுக்கு வருகிற 28 ந்தேதிக்குள் நிலுவை தொகையை தரணி சர்க்கரை ஆலை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வழங்க மறுத்தால் , விவசாயிகளை திரட்டி ஆலையின் வாசலில் அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அதிரடியாக அறிவித்தார். இதனை வரவேற்று விவசாயிகள் உற்சாகமடைந்தனர்.
தான் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதை மேடை தோறும் உச்சரிக்கும் பிஜிபி குழும தலைவர் பழனி ஜி பெரியசாமி, விவசாயிகளின் வியர்வையில் விளைந்த கரும்புக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை இனியும் தாமதிக்காமல் விரைந்து வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
- வெங்கடேசன்