தமிழகம்

தமிழகத்தின் புதிய மாவட்டங்கள் : ஓர் பார்வை!

தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. அந்த புதிய மாவட்டங்களின் சிறப்புகளை பார்ப்போம்…

எழில் கொஞ்சும் தென்காசி

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி தெற்கே ஆழ்வார்குறிச்சி முதல் வடக்கே சிவகிரி வரை பரந்து விரிந்திருப்பது தென்காசி மாவட்டம்…
இதனால் ராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி,ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களும், மோட்டை, ஸ்ரீமூலப் பேரி ஆகிய இரு சிறிய நீர்த்தேக்கங்களும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன

அருவிகளின் நகரமாம் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி, நெய்யருவி, ஆகியவற்றை பெற்றிருப்பது தென்காசி மாவட்டம்..
பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை ,கடையநல்லூர் ஆகிய இடங்களில் இருந்துதான் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம், இலஞ்சி குமரன் ஆலயம், புளியரை தஷ்ணாமூர்த்தி ஆலயம், பண்பொழி திருமலை முருகன் ஆலயம், இலத்தூர் சனி பகவான் ஆலயம், சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் ஆலயம் ஆகியவற்றுடன் பொட்டல்புதூர் பள்ளிவாசல், புனித மிக்கேல் அதிதூதர் சின்னப்பர் ஆலயம் ஆகியவை அமைந்திருப்பது இந்த மாவட்டத்தில்தான்….

பூலித்தேவன், வீர வாஞ்சிநாதன் போன்ற வரலாற்றில் இடம்பிடித்த பலரை அளித்ததும் இதே தென்காசி மாவட்டம்தான்.
தமிழக- கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியாக செங்கோட்டை புளியரை அருகில் உள்ள கோட்டை வாசல் விளங்குகிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் விவசாயம் செழித்து காணப்படுகிறது.

புதிய மாவட்டம் உருவாகியுள்ளதன் மூலம் தென்காசி மக்களின் 36 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. செழுமையான விவசாய பூமியாக உள்ள இப்பகுதி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வளம் பெற வேண்டும் என்பதே தென்காசி மக்களின் எதிர்பார்ப்பு…

தொழில் நிறைந்த ராணிப்பேட்டை..!

சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது. தொழில் நிறைந்த மாவட்டமாக ராணிப்பேட்டை உருவெடுத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியிருக்கும் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவை நிர்வாக ரீதியில் பணிகளை தொடங்கி உள்ளன.

திருப்பத்தூர் பெரிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் பிரியாணி உலகப் புகழ்பெற்றது. இந்த மாவட்டத்தின் தலைநகரான திருப்பத்தூர் 17.98 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அதன் மக்கள்தொகை 11,11,812 ஆகும்.
திருப்பத்தூர் நகரம் ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை என 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி. ஜவ்வாது மலை இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் நீரோடைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

வருவாய் நிர்வாகத்தை பொருத்தமட்டில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நாட்றாம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும் 15 உள்வட்டங்கள், உள்ளன.

இதே போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என்ற இரு வருவாய் கோட்டங்களும், அரக்கோணம், வாலாஜா, நெமிலி, ஆர்காடு என்ற நான்கு தாலுகாக்களும், அரக்கோணம், ஆர்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர் என்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் உள்ளன.

பசுமை நிறைந்த கள்ளக்குறிச்சி

கம்பீரமாக எழுந்து நிற்கும் கல்வராயன் மலை… இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான விவசாய நிலங்கள்… சுகர் சிட்டி என்றழைக்கப்படும் அளவுக்கு கரும்பு சாகுபடி… பார்க்கும் இடமெல்லாம் பச்சை கம்பளம் விரித்தாற் போல் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது கள்ளக்குறிச்சி…

ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட கள்ளக்குறிச்சியின் முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, மக்காசோளம், மஞ்சள், மரவள்ளி, பருத்தி, மணிலா, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர் இப்பகுதி மக்கள்..

சுகர் சிட்டி என்று அழைக்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சியில் கரும்பு சாகுபடியும், கரும்பு ஆலைகளும் அதிகம். 200க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளில் தயாராகும் அரிசி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது..

இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலைப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சின்னசேலத்திலிருந்து, கள்ளக்குறிச்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதனை உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை வரை நீடிக்கும் திட்டமும் உள்ளது. கள்ளக்குறிச்சியைச் சுற்றி ஏராளமான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இப்பகுதியில் புதிய தொழிற்பேட்டைகளைக் கொண்டு வந்தால் ஏராளமான படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.
மாவட்டத் தலைமையிடமாக செயல்படப் போவதால், மேலும் பல திட்டங்கள் தங்கள் ஊருக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் கள்ளக்குறிச்சி மக்கள்…!

“சென்னை நுழைவாயில் – செங்கல்பட்டு”

சென்னை மாநகரின் நுழைவாயில் எனக் கருதப்படும் முக்கிய பகுதி செங்கல்பட்டு. விவசாயம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்தையும் ஒருங்கே கொண்டது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், காஞ்சிபுரம் போன்ற வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரங்கள் அருகே அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு…
பாலாறு, குளவாய் ஏறி, மதுராந்தகம் ஏரிகள் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகின்றன.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம் தமிழக மக்களின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகளில் முட்டுக்காடு மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கமான ஒன்று…

வண்டலூர் உயிரியல் பூங்கா, விரைவில் அமைய உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ராமகிருஷ்ண மடம், சேவாபாரதி போன்றவை அமைந்துள்ளதும் இந்த மாவட்டத்தில்தான்.

புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள செங்கல்பட்டு அனைத்து துறைகளிலும் மென்மேலும் வளர்ச்சிபெறும் என்பதில் ஐயமில்லை…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button