திருப்பூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா !

ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடி பெருக்கு என அழைக்கப்படுகிறது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு படையெடுக்க தொடங்கினர். காலை முதலே பல்வேறு பகுதியில் உள்ள முக்கிய ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் கூடியது.

குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில்கள், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில், கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில், காரத்தொழுவு அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில் போன்ற அம்மன் கோயில்கள், சிவ ஆலயங்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து முளைப்பாரி சுமந்துவந்து நாட்டுப்புறப் பாடலை பாடி, கும்மி அடித்து ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆற்றில் விட்டனர்.

காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு காரத்தொழுவு திமுக சார்பில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெயரில் 1500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பக்தர்களுக்கு உணவு பரிமாறி அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.




