மாவட்டம்

சட்டவிரோத தண்ணீர் திருட்டு ! உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?.!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கடத்தூர் அருகே விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுகொள்ளாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

மடத்துக்குளம் வட்டம் கடத்தூரில் மதிவாணன் என்பவர் அர்ச்சுனேஸ்வரர் சிவன் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை 2027 ஆண்டு வரை குத்தகைக்கு எடுத்துள்ளார்.  இவருடைய வயலுக்கு அருகில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராஜ வாய்க்காலில் இருந்து மதிவாணன் என்பவர்  வயலுக்கு நடுவில் சட்டவிரோதமாக குழாய் அமைத்து  தண்ணீரை தனியார் மட்டை மில், பேப்பர் மில், கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மதிவாணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதன் பேரில் உடுமலை கோட்டாட்சியர், மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆகியோர் கூட்டுப்புல தணிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 12 ந்தேதி காலை வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், பொதுப்பணித்துறை மடத்துக்குளம் உதவி பொறியாளர் ராமசந்திரன் அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  வாய்க்காலில் நீர்வரத்து உள்ளதால் வருகின்ற 21ந்தேதி  தண்ணீர் நிறுத்தம் செய்த பிறகு  அப்பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதா ? என ஆய்வு செய்யப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குழாய்களை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தனர். இந்த விசயத்தில் திருட்டுத்தனமாக குழாய் பதித்துள்ள நபர்களுக்கு சாதகமான சூழலை உதவி பொறியாளர் ராமசந்திரன் ஏற்படுத்தி தருவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்து இருந்தனர்.

ராஜ வாய்க்கால் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் திருடப்பட்டு அங்குள்ள தனியார் தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. ராஜ வாய்க்கால் நீரை பாசன விவசாய நிலங்களை தவிர்த்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல இடங்களுக்கு கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கடத்தூர், கணியூர், சோழமாதேவி, காரத்தொழுவு ஆகிய பகுதிகளில் வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருப்பதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அரசு ஒதுக்கும் நிதியை முறையாக செலவிடாமல் தரமில்லாத பணிகளை செய்து வாய்க்கால் பகுதிகளை பராமரிப்பு செய்யாமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து 21ம் தேதியான நேற்று தண்ணீர் நிறுத்தம் செய்து தண்ணீர் திருடுவதற்காக சட்ட விரோத குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்ததை அடுத்து கணியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ராஜ வாய்க்காலில் நீருக்கு அடியில் சட்ட விரோதமாக பதிக்கப்பட்டு இருந்த குழாய்கள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.  சட்டவிரோத தண்ணீர் திருட்டை தடுக்க தவறிய உதவி பொறியாளர் ராமசந்திரன் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button