பல்லடத்தை உலுக்கிய உளுந்தூர்பேட்டை முந்திரி மோசடி வழக்கில்.. ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வாளாம்பட்டை அடுத்த தொப்பயாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (39). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துலட்சுமி இண்டர்நேசனல் டிரேட் என்கிற பெயரில் விவசாயிகளிடம் முந்திரியை நேரடியாக கொள்முதல் செய்து, மொத்த முந்திரி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த ஜெமிஷா, அருண், சம்சுதீன், செல்வல் உதையா ஆகியோர் கனகராஜை தொடர்புகொண்டு தாங்கள் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் அக்ரிகல்சர் ஜெம் கெயின் நிறுவனம் நடத்திவருவதாகவும், மொத்தமாக மூன்று டன் முந்திரி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர். பின்னர் முதல்கட்டமாக 9 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாய் மதிப்புள்ள ஒன்னரை டன் முந்திரியை கனகராஜ் நேரடியாக சென்று சப்ளை செய்துள்ளார். அதற்குண்டான தொகையை வங்கியில் செலுத்திவிடுவதாக ஜெமிஷா தெரிவித்துள்ளார். பின்னர் பல நாட்கள் ஆகியும், நாட்கள் கடத்தி வந்த நிலையில் காசோலை வழங்கியதாகவும், அதுவும் பணம் இன்றி திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் மோசடி செய்ததை உணர்ந்து, பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜெமிஷா மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிபந்தனை ஜாமீனில், விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்லடம் நீதிமன்றத்தில் பெயில் பெற்ற ஜெமீஷா அதன் பின்னர் சுமார் 3 நாட்கள் மட்டுமே பல்லடம் காவல் நிலையத்தில் கண்டிசன் பெயில் கையெழுத்திட்டுவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஜெமிஷாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஜெமிஷாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.