53 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் ! கலக்கத்தில் பதுங்கும் கடத்தல் கும்பல் !

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் பேரில், காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா மேற்பார்வையில், இயங்கும் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை ரெட் ஹில்ஸ், புழல், பாடியநல்லூர் பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடந்த சோதனையில் ஒரு டாரஸ் லாரி, டாடா ஏசி, மினி லாரி, பொலேரோ ஜீப், புல்லட் வாகனங்களை பயன்படுத்தி ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்துள்ளது. அந்த வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 53 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் கடத்தலில் ஈடுபட்ட ராஜீ, ராஜேஷ், சதீஷ், அப்துல் ரஹிம், துரைப்பாண்டி ஆகிய ஐந்து நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையில் ரெட் ஹில்ஸ், புழல், பாடியநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை, குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச்சென்ற 53 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், லாரியை பறிமுதல் செய்ததோடு, கடத்தல் கும்பலையும் கைது செய்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் ஐபிஎஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் முன்னாள், இன்னாள் குற்றவாளிகள் என அனைத்து நெட்வொர்க் கும்பலையும் பிடிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
_கே.எம்.எஸ்