கிராம ஊராட்சி செயலர் அதிரடி மாற்றம், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாட்டம் !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் இருபது கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒன்பது ஊராட்சி செயலர்களை அதிரடியாக மாற்றம் செய்து பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின்படி வடுகபாளையம் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி கணபதிபாளையத்திற்கும், சுக்கம்பாளையம் ஊராட்சி செயலர் சுரேஷ் வடுகபாளையம் புதூருக்கும், புளியம்பட்டி செயலர் கவிதா சித்தம்பலத்திற்கும், சித்தம்பலம் ஊராட்சி செயலர் புவனேஷ்வரி கரடிவாவிக்கும், கரடிவாவி ஊராட்சி செயலர் ராஜாமணி புளியம்பட்டிக்கும், மாணிக்காபுரம் ஊராட்சி செயலர் காளிச்சாமி சுக்கம்பாளையம் ஊராட்சி கூடுதல் பொறுப்பும், பருவாய் ஊராட்சி செயலர் மணிகண்டன் இச்சிப்பட்டி ஊராட்சி கூடுதல் செயலர் பொறுப்பும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே கணபதிபாளையம் ஊராட்சி செயலராக பிரபு சங்கர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பதவியின்றி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதனிடையே ஊராட்சி செயலர் பதவியில் இருந்து பிரபு சங்கர் மாற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த. அப்பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவர் கூறும்போது, பல ஆண்டுகளாக ஊராட்சி செயலராக பணியாற்றிய பிரபு சங்கர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு நல உதவித்திட்டங்களில் ஊழல் செய்திருப்பதாகவும், தற்போது மாறுதல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.