நிலோபர் செய்த முறைகேடு…ஆதாரங்களுடன் ஏற்கனவே நாற்காலி செய்தியில்….
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவரது உதவியாளராக இருந்தவர் நிலோபர் கபில் மீது டிஜிபி அலுவலகத்திலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ஆறு கோடிக்கு மேல் பணம் வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக பல மாதங்களாக மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக ஆதாரங்களுடன் நமது இதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, கல்லூரியின் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் யார் யாரிடம் எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டார்கள் என்ற ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டு இருந்தோம். இது சம்பந்தமான வீடியோ, ஆடியோ ஆதாரங்களும் பிரத்யேகமாக நமக்கு கிடைத்தது.இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணிநிரந்தரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுக ஆட்சி இருக்கும் வரை காத்திருந்தார்கள். தகுதி இல்லாத நபர்களையும் பணத்தை பெற்றுக்கொண்டு நேர்முக தேர்வில் முறைகேடு செய்து அமைச்சர் பதவியை முறைகேடாக பயன்படுத்தினார் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தோம்.
இவர்கள் செய்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இவர்கள் நியமித்த நியமனங்கள் செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி தவறு செய்த நிலோபர் கபில், அன்வர்ராஜா, ஜமால் முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தண்டிக்கப்பட இருக்கும் நிலையில் நிலோபர் கபில் உதவியாளர் புதிய புகார் அளித்தது நிலோபர் கபிலுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.