பழனி முருகன் கோவிலில் மாற்று மதத்தினருக்கு தடை ! அறநிலையத்துறை என்ன சொல்கிறது ?
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மாற்று மதத்தினர் செல்ல அனுமதி இல்லை என்ற பதாகை அகற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பதாகைகள் சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகளுக்காக அகற்றப்பட்டன. இதற்கிடையே, பழனி பேருந்து நிலையம் அருகில் பழக்கடை வைத்துள்ள சாகுல் ஹமீது என்பவர் உறவினர்களை அழைத்து வந்து டிக்கெட் பெற்றுள்ளார். டிக்கெட் பெற்ற பின்பு, அவரது உறவினர்கள் புர்கா அணிந்துள்ளனர். அதைப் பார்த்த நிர்வாகிகள், இங்கு மாற்று மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை என கூறி வழங்கிய டிக்கெட்டை திரும்ப பெற்றுள்ளனர்.
அப்போது சாகுல் ஹமீது அவரது உறவினர்களுடன், மின் இழுவை ரயில் கண்காணிப்பாளரிடம், வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது சுற்றுலா தளம் என்றும் நீங்கள் பதாகைகள் வைத்திருந்தால் நாங்கள் ஏன் உள்ளே வரப் போகிறோம் என்றும் கேள்வியை எழுப்பியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றால் அங்கு கொடுக்கப்படும் பிரசாதம் வாங்கி சாப்பிட வேண்டும்.
இறைவனை தரிசிக்க வேண்டும். மேலும் இது சுற்றுலா தலம் அல்ல எனக் கூறியுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவும் ட்வீட் செய்திருந்தார். அதில், பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை வைத்து, பின் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக, இந்து அறநிலையத் துறையும் விளக்கம் அளித்துள்ளது.
கா.சாதிக்பாட்ஷா
திண்டுக்கல் மாவட்ட நிருபர்