கொடநாடு கொலை கொள்ளை : சிக்கலில் எடப்பாடி?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளானதில் அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்த தினேஷ் குமார் என்பவரும் மரணம் அடைந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இதற்கிடையே கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சயான் மற்றும் கேரளாவை சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல மாதங்களாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணப்படத்தை டெல்லி பிரஸ் கிளப்பில் மேத்யூஸ் வெளியிட, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வீடியோவில் வெளியாகி உள்ள தகவல்களில் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன் மனோஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத் தலைவர் ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார், புது தில்லிக்கு சென்றனர். அங்கு சயனையும், மனோஜையும் உடனடியாக கைது செய்தனர்.
பின்னர் 3 பேரையும் போலீஸார் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு தலைமையிலான போலீஸார் பல கட்டங்களாக 11 மணி நேரம் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் சைதாபேட்டை நீதிபதி வீட்டில் சயன், மனோஜ் இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் சயன், மனோஜ் இருவரையும் விடுவித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பில் “2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்கிறார். அடுத்த இரண்டு மாதங்களில் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெறுகிறது. அப்போது காவலாளி ஓம் பகதூர் மர்மமான முறையில் உயிரிழந்துவிடுகிறார்.
அடுத்த சில நாட்களில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் ஜெயலலிதா – சசிகலாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மறுநாளே கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயன் கார் கேரளாவில் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறுகிறார்கள். இந்த விபத்தில் சயன் தப்பினாலும் அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துவிடுகிறது. அடுத்த 2 மாதங்களில் கொடநாடு சி.சி.டி.வி ஆப்பரேட்டர் தினேஷ் தூக்கு போட்டு இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்த நான்கு சம்பவங்களுமே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு தான் நிகழ்கின்றன.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் முதலமைச்சரின் கேம்ப் ஆபிசாகவும் செயல்பட்டு வந்ததால் அங்கு 24 மணி நேரமும் மின் விநியோகம் வழங்க சிறப்பு அனுமதியை கொடுத்ததே நான் மத்திய அமைச்சராக இருந்த போது தான். ஆனால் கொள்ளை நடைபெற்ற தினத்தில் மின்சாரம் கொடநாடு எஸ்டேட்டிற்கு கட் செய்யப்பட்டுள்ளது. அது எப்படி? யார் கட் செய்தார்கள்? யார் சொல்லி கட் செய்தார்கள்?
முன்னாள் முதலமைச்சரின் வீடு என்ற வகையில் கொடநாடு எஸ்டேட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு உண்டு. ஆனால் கொள்ளை நடைபெற்ற போது அங்கு ஒரு போலீஸ் கூட இல்லையே ஏன்? கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்ற அன்று சி.சி.டி.வி கேமராக்கள் செயல்படவில்லை என்கிறார்கள்? அது எப்படி அன்று மட்டும் சி.சி.டி.வி செயல்படவில்லை? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போன்ற அதிகாரம் மிக்க நபரின் தலையீடு இல்லாமல் கொடநாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்காது, காவலர்கள் இல்லாமல் இருந்திருக்கமாட்டார்கள்.
இதுநாள் வரை இந்த வழக்கில் சயன் குற்றவாளியாக இருந்தார். ஆனால் எப்போது அவர் இந்த சம்பவங்களை செய்தது தாங்கள் தான் என்று கூறினாரோ, அப்போதே அவர் அப்ரூவர் ஆகிவிட்டார். கிரிமினல் சட்டப்படி சயனை அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெற வேண்டும். அங்கும் அவர் எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் இவற்றை செய்ததாக கூறினால் உடனடியாக எடப்பாடி பழனிசாமியை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்” என்றார்.
ஆ.ராசா எழுப்பியுள்ள கேள்விகள் ஆளும் எடப்பாடி தரப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநரை சந்தித்து எதிர்கட்சியினர் புகார்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா ஆகியோர் சந்தித்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கொடநாடு எஸ்டேட் விடியோ விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தோம்.
அந்த மனுவில், முதல்வராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கக்கூடாது. நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விலக அறிவுறுத்த வேண்டும். இந்தக் கொலை வழக்கில் எஞ்சியிருக்கக் கூடிய தடயங்களை அழிக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார். அவர் உடனடியாக பதவி விலகி பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். நாங்கள் கூறியதையெல்லாம் ஆளுநர் கூர்ந்து கேட்டார். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயம் எடுப்பேன் என்ற உறுதியையும் அவர் தந்துள்ளார். இந்தத் தகவலை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளோம்.
இந்நிலையில் இன்று மாலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஜெயவர்தன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் அளித்தோம் என்றார். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக ஆளுநரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தவறான கருத்து கூறினால் 7 வருட சிறை உண்டு என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என்றார். கொடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பதை சசிகலா தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார் என தெரிவித்தார்.