பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் சட்டமன்ற கூட்டத்தொடர்?.!
சட்டமன்ற கூட்டத்தொடரில் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் இடமளிக்க கூடாது என பழனிச்சாமி அணியினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லை என கூறினார்.
இது சம்பந்தமாக அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசுகையில்… தற்போதைய நிலையில் அதிமுகவில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இருவரும் இரண்டு அணிகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையில் உள்ளது. ஆகையால் அதிமுக விற்கு தற்போது யார் தலைமை என்று முடிவாகாத நிலையில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற இரு அணியினரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். சட்டமன்ற விதிகளின்படி சபாநாயகர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எங்கும் அமர வைக்கலாம். தற்போதைய நிலையில் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் பதிவேடுகள் உள்ளது. இது சபாநாயகராக இருந்த ஜெயக்குமாருக்கும் தெரியும்.
தற்போது ஜெயக்குமார் அவரது தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன அதிமுகவின் செல்லாக்காசு போன்றவர். ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் தற்போது அவருக்கு செல்வாக்கு இல்லாததால், கட்சியினர் மத்தியில் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக பத்திரிகையாளர்கள் மத்தியில் தொடர்ந்து உலருகிறார். இவரது பேச்சை அதிமுக தொண்டர்கள் யாரும் ரசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவிற்கே உதாரணமாக திகழும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகத்தான் இரண்டு அணியினரும் செயல்படுவார்கள். ஆனால் பழனிச்சாமி அணியினர் பிரச்சினை செய்தால் அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட சபாநாயகர் முடிவெடுப்பார். எதிர்க்கட்சித் தலைவராக பழனிச்சாமியும், எதிர்க்கட்சித் துணை தலைவராக பன்னீர்செல்வமும் தான் செயல்பட போகிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டும் கொடுக்காத பழனிச்சாமி மீது இருக்கும் கோபத்தை காட்டிக்கொள்ளாத ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினராகக்கூட வெற்றி பெற முடியாத ஆதங்கத்தில் பண்ணீர் செல்வத்தை அசிங்கப்படுத்தி பழனிச்சாமியிடம் ஆதாயம் பெற முயல்கிறார்.
மேலும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜெயலலிதா மரணம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு போன்ற அணல் பறக்கும் விவாதங்களை தவிர்ப்பதற்காக பன்னீரசெல்வம் அதிமுக உறுப்பினராக தொடரக்கூடாது என பிரச்சனையை கிளப்பி வெளிநடப்பு செய்ய காரணம் தேடுகிறார் பழனிச்சாமி. அவ்வாறு பழனிச்சாமி அணியினர் வெளிநடப்பு செய்தாலும் பன்னீர்செல்வம் அணியினர் கலந்துகொண்டு பேசினால் அதிமுகவினர் பேசியதாகவே பதிவேடுகளில் பதிவேற்ற சபாநாயகர் முடிவெடுப்பார். வெளிநடப்பு செய்தாலும் பழனிச்சாமிக்கு சிக்கல் தான். மக்கள் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவராக எடுத்துரைக்காமல் வெளிநடப்பு செய்கிறார் என மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆகமொத்தத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் பழனிச்சாமிக்கு சிக்கலையே ஏற்படுத்தும் என்கின்றனர்.