
2004 மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்த வெற்றிக்கு பரிசாக, கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவைச் சேர்ந்த எம்பியான ஆ.ராசாவை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக்கியது காங்கிரஸ்.
2007 மே மாதம் ஆ.ராசா அமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே 2 ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஏல விவகாரத்தை கையில் எடுக்கிறது பாஜக. 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விஷயத்தை பாஜக கையில் எடுத்து, 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழங்கியது. இந்த முழுக்கம் நாடு முழுவதும் காட்டுத் தீயாய் பரவவே, 2010 இறுதியில் தமது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார் ஆ.ராசா.
அத்துடன் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் எண்ணி கொண்டிருந்த நிலையில், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முறைகேடு என அடுத்தடுதது ஊழல் பூதங்களை பாஜக கிளப்பிவிடவே, இவையெல்லாம் சேர்ந்து 2014 இல் காங்கிரஸ் ஆட்சியை மொத்தமாய் கவிழ்த்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது 2 ஜி அலைக்கற்றை விவகாரம்தான். அந்த விவகாரத்தில் சரியாக அரசியல் செய்து மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.

2 ஜி யை வைத்து காங்கிரஸை வீழ்த்திய பாஜகவை பழிதீர்க்க 5 ஜி அலைக்கற்றை ஏலம் எனும் பிரம்மாஸ்திரம் தற்போது காங்கிரஸ் கையில் தானாக கிடைத்துள்ளது. ‘கடந்த வாரம் நடைபெற்ற இந்த ஏலத்தில் அடிப்படை மதிப்பாக 4.3 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிர்ணயித்திருந்த நிலையில், 71 சதவீதம் அலைக்கற்றை மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதற்கே 3 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு மட்டுமே கிடைத்துள்ளதாக திமுக எம்பியும். முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, மத்திய பாஜக அரசு மீது அணுகுண்டை வீசி உள்ளார்.
மத்திய பாஜக ஆட்சியில் ஊழல், முறைகேடு என்ற பேச்சுக்க இடமில்லை என்ற கிளீன் இமேஜ் உடன் 8 ஆண்டுகளாக கர்வத்துடன் வலம் வந்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை டேமேஜ் செய்ய, காங்கிரசின் கையில் 5 ஜி எனும் வலுவான ஆயுதத்தை ஆ.ராசா கொடுத்தும், அதனை பாஜகவை வீழ்த்தும் விதத்தில் காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ளுமா என்ற சந்தேகம் அக்கட்சியின் அபிமானிகள் மத்தியிலேயே எழுந்துள்ளது.
5 ஜி ஏல விவகாரம் குறித்து ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் மட்டும் இதுவரை கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸுக்கு எதிராக முன்பு, ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே தற்போது எங்கு போனார் என்று கெலாட் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரை தவிர சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் யாரும் இந்த விஷயத்தில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.. மத்திய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் கையில் கிடைததுள்ள கடைசி ஆயுதமான 5 ஜியை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதில்தான் காங்கிரசின் எதிர்காலமே அடங்கி உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.