ரவி தேஜா நடிப்பில் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாகும் “டைகர் நாகேஸ்வரராவ்”
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், மாஸ் மகாராஜாவுமான ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் முதல் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கம் இந்திய திரையுலகின் பேசு பொருளாக மாறியது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் லேட்டஸ்ட்டாக சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபவம் கேர் இணைந்திருக்கிறார். அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர், ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரித்து பிரம்மாண்டமான வசூல் வெற்றியைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனும் படத்தில் நடித்திருந்தார். இவர் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது.
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் இலட்சிய படைப்பு இது என்பதால், பட உருவாக்கத்தில் சமரசம் செய்யாமல் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘டைகர் நாகேஸ்வரராவை’ உருவாக்கி வருகிறார்.
‘டைகர் நாகேஸ்வரராவ்’ 1970களில் ஸ்டூவர்ட் புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த திருடன் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாவதால், கதையின் நாயகனாக நடிக்கும் ரவி தேஜா, இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மேலும் ரவி தேஜா இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாகவும் இது இடம்பெற்றிருக்கிறது.
‘டைகர் நாகேஸ்வரராவ்’ தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது. ஆர். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற, ஸ்ரீகாந்த் விஸா வசனம் எழுதுகிறார். இணை தயாரிப்பாளராக மயங்க் சிங்கானியா பணியாற்றுகிறார்.