திருட்டு கதையில் புகழ் தேடும் ஜென்மங்கள். “படைப்பாளன்” விமர்சனம்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு, எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து சென்னைக்கு வந்து உதவி இயக்குனராக சேர்ந்து சினிமா கற்றுக் கொண்டு, தனது படைப்புகளை தயாரிப்பாளர்களிடம் கூறி இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு எண்ணற்ற இளைஞர்கள் கோடம்பாக்கத்தை சுற்றி வருகின்றனர்.
இவ்வாறு புதிதாக வாய்ப்பு தேடும் இளைஞர்களிடம் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களின் ஆசையை தூண்டும் விதமாக பேசி, அவர்களின் படைப்புகளை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களின் அன்றைய தேவைக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஒரு ரகம். உதவி இயக்குனராக வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களிடம் ஏதாவது கதை சொல் பார்க்கலாம் என்று கதையைக் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் இயக்குனர்கள் மற்றொரு ரகம்.
சில நாட்கள் கழிந்ததும் உதவி இயக்குனர்களின் படைப்புகளை சில மாற்றங்களோடு தனது படைப்புகளாக படத்தை வெளியிட்டு வழக்குகளில் சிக்கிய இயக்குனர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இது போன்ற உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து, சில கற்பனைகளோடு “படைப்பாளன்” படத்தை அறிமுக இயக்குனர் தியான் பிரபு இயக்கி நடித்திருக்கிறார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சுற்றித் திரியும் இளைஞர்களின் வாழ்கையைச் சொல்லும் ஜனரஞ்சகமான படமாக வந்துள்ளது “படைப்பாளன்”