தமிழகம்

காத்திருக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா… தொடரும் தற்கொலைகள்… என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..?

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்க, தமிழக அரசும் கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதே உண்மை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், 2022-23ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு முட்டுக்கட்டையாக நீட் தேர்வு இருக்கிறது என்பதே தமிழக அரசு மற்றும் தமிழக மக்களின் நிலைப்பாடாக உள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முன்மொழிந்து, மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தமிழக அரசு எதிர்பார்க்கிறது. தமிழக அரசின் கூற்றுப்படி, ஒரே நாளில் நாடெங்கும் நடத்தப்படும் நீட் தேர்வு, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள மாணவர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

துல்லியமாகச் சொல்வதானால், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அளவிலான தேர்வுகள் உள்ளன. அதே நேரத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவிலான கல்லூரி சேர்க்கைக்கு ஒரே ஒரு நுழைவுத் தேர்வுதான் உள்ளது அதுவே நீட். மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விஙிஙிஷி மற்றும் ஙிஞிஷி படிப்புகளுக்கு நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமையால் நீட் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.

ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் தேர்வாக நீட் இருந்தாலும், இப்போட்டித் தேர்வு சில மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்வையற்றதாக கருதப்படுகிறது. திமுக மட்டும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை, அதிமுக, பாமக, மதிமுக, விசிக, தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளன. மேலும், 2007ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் நுழைவுத் தேர்வு கலாச்சாரம் இல்லை என்று கூறி தமிழகம் நீட் தேர்வை எதிர்க்கிறது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சியைத் தேர்வு செய்யத் தொடங்கினர். இது கிராமப்புற மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் அநீதி இழைத்தது.

2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கையில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி, ‘தமிழகத்தில் மருத்துவ சேர்க்கையில் நீட் தாக்கம்’ என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்தனர். மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டியின் 165 பக்க அறிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில், மருத்துவ நுழைவுத் தேர்வு- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய தனிச் சட்டம் இயற்றி இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் ரத்துச் சட்டம் அமலுக்கு வருவது, மருத்துவப் படிப்பு சேர்க்கையில் பாதிக்கப்படும் மாணவர் சமூகங்களுக்கு சமூக நீதியை உறுதி செய்யும்.

தகுதித் தேர்வு என்பது மாநிலத்தை சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களுக்கு அழைத்துச் செல்லும் என்றும், தேவையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்து நிலைகளிலும் அதை அகற்ற மாநில அரசு விரும்புகிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் தேர்வுக்கு பிறகு கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வியில் சேர்க்கை குறைந்து வருவதாகவும், நீட் தேர்வு தொடர்ந்தால் கிராமப்புற மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களே இருக்க மாட்டார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில், தமிழகத்தின் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் பின்தங்கிய பிரிவினரிடையே மருத்துவ சேர்க்கையில் சராசரியாக 11.2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது; 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்குப் பிறகுதான், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடிந்தது என்றும் அறிக்கை கூறுகிறது. நீட் தேர்வானது சமூகத்தில் வசதி படைக்கப்பட்ட மற்றும் உயரடுக்கு பிரிவினருக்கு சாதகமாக அமைந்தது என்றும், நலிந்த பிரிவினருக்கு அல்ல என்றும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அவர்கள் முன்வைத்த மற்றொரு வாதம், சிபிஎஸ்இ மற்றும் ஷிtணீtமீ ஙிஷீணீக்ஷீபீ பாடத்திட்டத்தில் உள்ள வேறுபாடு பற்றியது.

கடந்த ஆண்டு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தமிழக சட்டசபையில் முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்டது. நீட் விலக்கு மசோதா என்பது பாதிக்கப்படும் மாணவர் சமூகங்களுக்கு மருத்துவத் படிப்புகளில் சேர்க்கைக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதிலிருந்து சமூக நீதியை உறுதி செய்வதைக் குறிக்கும் மசோதாவாகும். மேலும், எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்பில் உள்ள பல்வேறு சமூகப் பிரதிநிதித்துவம், முக்கியமாக சமூகத்தில் வசதி படைத்த பிரிவினருக்கு சாதகமாக உள்ளது; பின்தங்கிய சமூகக் குழுக்களின் கனவுகளை சிதைக்கும் விதமாக நீட் உள்ளது என்பதுதான் அந்த மசோதாவின் சாராம்சம்.

மாநிலம் முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் வலுவான பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு முழுதாக நம்புகிறது.

இறுதியில், மாநில அரசு இந்த ஆண்டு பிப்ரவரியில் இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியது. பின்னர், நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. இருப்பினும், குடியரசுத் தலைவர் நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, அதை மத்திய அரசு நிறைவேற்றினால், மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்தவோ அல்லது மருத்துவ சேர்க்கைக்கான 12ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ சீட்டு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடைக்கும். தேசிய அளவிலான தேர்வு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஒரே வழியாக இருக்காது. இப்படியாக இருக்க, நீட் தேர்வு தற்போது நெருங்கும் நேரத்தில் சென்னை மாணவர் தற்கொலை செய்துகொண்டது நீட் விலக்கு மசோதாவை மாநில அரசு மீண்டும் வலுவாக வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button