அதிகரிக்கும் வழிப்பறி மோசடி..!
சென்னையில் வங்கியில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவருக்கு சிறு வயதிலிருந்தே வங்கியில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருந்ததால் இவரது நண்பர் மூலமாக ராஜ் பரத் (35) என்பவர் பழக்கமாகி உள்ளார்.
இவர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இளநிலை அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் பணி கிடைக்க வேண்டுமென்றால் சுமார் 13 லட்சம் வரை செலவாகும் என்று பிரதீப் குமாரிடம் தெரிவித்து உள்ளார்.
இதனை நம்பி 13 லட்சம் ரூபாயை ராஜ் பரத்திடம் கொடுத்துள்ளார். பின்னர் நீண்ட நாளாகியும் வேலை வாங்கி தராததால் சந்தேகப்பட்டு அவரை தொடர்பு கொண்ட போது தலைமறைவாகி விட்டார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல புரசைவாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் ரூபாய் 6 லட்சம் கொடுத்து இவரால் ஏமாற்றப்பட்டதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறிய ராஜ் பரத் பல பேரை ஏமாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜ் பரத் மீது முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ் பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் சென்னை மணலி பகுதியிலிருந்து தேனாம்பேட்டை வரை ஒரே இரவில் 18 செல்போன்களைப் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பார்க் ஹோட்டலில் இருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
பின்னர் தப்பி சென்ற இருவரையும் இவர்களது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
அப்போது செல்போன் பறித்து தப்பி சென்ற வாகனத்தின் மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்துள்ளனர். பின்னர் செல்போனை பறித்து சென்ற ஒருவரை இவர்கள் பிடித்துள்ளனர். ஆனால் ஒருவர் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் பிடித்த நபரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி(22) என்பதும், இவர்கள் மணலி பகுதியிலிருந்து ஒரே இரவில் 18 பேரிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பிச் சென்ற இவரது கூட்டாளியான கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவரிடம் இருந்து 18 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருடிய புல்லட்டை வைத்து சாலையில் நகைப் பறிப்பு! பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கி கைதாகிய 3 சிறுவர்கள்
மதுரையில் தொடர்ச்சியாக வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறார் திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டபோது பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை வண்டியூரில் தனி வீட்டில் வசித்து வந்த இந்த சிறார்கள், அனைவரும் உறங்கியபின் இரவு 1 மணியை தேர்வு செய்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பல திருட்டில் போலீசார் மடக்கியதை தொடர்ந்து நகர் பகுதி வேண்டாம் எனக்கூறி, புறநகரான மேலூரில் வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருந்தும் அது தொடர்பான வழக்குகளில் ஆஜர் ஆகாததால் ‘வாய்தா’ சிறார் என போலீசாரால் அழைக்கப்படுகின்றனர். அவர்கள், மதுரை அனுப்பானடி தமிழன் தெருவில் உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் என்பவரின் புல்லட்டை திருடியுள்ளனர்.
குற்றப்பின்னணி கொண்ட ‘வாய்தா’ சிறார்கள் என அழைக்கப்படும் லிங்க பிரபு, ஆதிஸ்வரன், பழனி குமார் ஆகிய மூவரும் திருடிய அதே புல்லட் பைக்கை வைத்துக் கொண்டு மேலூர் அருகே மன்ற மலைப்பட்டி கண்மாய் பகுதியில் கத்தியைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கீழவளவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருடப்பட்ட புல்லட் கைப்பற்றப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.
- நூருல்அமீன்