மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர் என்று நினைக்கிறாரா?
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டமசோதாவுக்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதுசம்பந்தமாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
தமிழ்நாடு அரசின் உயர்கல்வியின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்விஅளிப்பதில் இந்த பல்கலைக்கழகங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலை ஆற்றி வருகின்றன. இவற்றின் வேந்தராக ஆளுநரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படக்கூடிய வேளையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கக் கூடிய அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தர்களை நியமிப்பது மரபாக உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தனக்கு மட்டுமே உரிமை என செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு அதிகரித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்ய முடியவில்லை என்பது பல்கலைக்கழக நிர்வாகத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மக்கள் ஆட்சியின் தத்துவத்துக்கு எதிராக இருக்கிறது. இது மாநில அரசினுடைய உரிமை தொடர்பான பிரச்சனை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை என்பதால் சட்டமுன்வடிவை ஒரு மனதாக நிறைவேற்றி தரவேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமசோதாவிற்கு காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து பேசினார். அதன்பிறகு இந்த சட்டமசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெரியார் திடலில் நடைபெற்ற திராவிட கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் பேசுகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுக்கு ஆளுநரிடம் ஒப்புதல் கேட்கவில்லை. ஒப்புதல் வழங்கவேண்டிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். முன்வடிவை அனுப்பி வைக்கக் கூடிய அஞ்சல்துறை பணியைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு அழகல்ல.
எட்டுக்கோடி தமிழர்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் மசோதாவை ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். மீண்டும் அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தொடர்ந்து மறுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை தீட்டினால், நியமன பதவியில் இருப்பவர் திருப்பி அனுப்புகிறார். மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர் என்று நினைக்கிறாரா? அப்படி ஒரு எண்ணம் அவர் மனதில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியே குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஆளுநர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் இப்போது இருப்பது போல் தான் அப்போதும் இருந்திருப்பாரா? பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்தால் மாநில அரசுகள் முடங்கி விடும். கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்று நினைக்கிறீர்களா?
எதேச்சதிகாரத்தால் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். வரலாறு என்பதே சாம்ராஜ்யங்கள் அழிந்த கதைதான் என்று அண்ணா குறிப்பிட்டுள்ளார். இது மக்கள் ஆட்சி நடைபெறும் நாடு என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டும். மாநிலங்கள் இணைந்ததால் தான் ஒன்றியம் என்பதை ஒன்றிய அரசும், அவர்களின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர்களும் உணர வேண்டும். நீட் தேர்வு என்பது மருத்துவ கல்லூரியில் நுழைய அனுமதிக்கும் தேர்வு மட்டுமல்ல. மருத்துவ கல்வி என்பதை உயர்வர்க்கத்தினருக்கான கல்வியாக மாற்ற நினைப்பதால் தான் இது நவீன அறிவு தீண்டாமை என்றேன்.
புதிய கல்விக் கொள்கை என்பது பெரும்பான்மை மக்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கக் கூடிய கல்வி நிலையங்களாகத்தான் மாறப்போகிறது. ஆனால் அது நிச்சயம் நடக்காது. இவர் படிக்க வேண்டும், இவர் படிக்க கூடாது என்பதெல்லாம் கட்டுக்கதைகளை நம்பி வாழ்ந்த பழமைவாதங்கள். ஆனால் இது இந்த மண்ணில் இரத்தமும் சதையுமாக வாழக்கூடிய மக்களின் உள்ளங்களில் சுயமரியாதையும், பகுத்தறிவும் வேரூன்றியுள்ள திராவிட இயக்கத்தின் காலம். இங்கே அந்த கட்டுக்கதைகளுக்கு இடமில்லை. இவ்வளவு காலமாக பழமை வாதத்தை எதிர்த்து பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அவர்களது சூழ்ச்சிகளை மக்கள் துணையோடு முறியடித்துள்ளோம். இதில் இறுதி வெற்றி உறுதியாக நமக்குத்தான். அத்தகைய நம்பிக்கையோடு போராடுவோம். திராவிடக் கொள்கை தீபத்தின் வெளிச்சத்தில் எனது ஆட்சிப் பயணம் செல்லும், இந்தப் பயணம் வெல்லும் என்று பேசினார்.
– சூரியன்