மலைப்பகுதியில்.. பேருந்து பழுதானதானதால் பயணிகள் அச்சம் !

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு பேருந்து பணிமனையிலிருந்து இன்று காலை தாண்டிக்குடி மலைப்பகுதிக்கு புறப்பட்டு சென்ற அரசு பேருந்து, தாண்டிக்குடி அடுத்துள்ள தடியன்குடிசை அருகில் வந்தபோது டயர் பஞ்சராகி நின்றதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பேருந்து பழுதாகி நின்ற இடம் காட்டு யானைகள் அதிகளவில் நடமாடும் இடம் என்று தெரிந்தும், பேருந்தில் பயணித்த பயணிகளை கீழே இறக்கி விட்டு சுமார் ஒரு மணி நேரம் நடுரோட்டில் காத்திருக்க செய்துள்ளனர். பேருந்தில் வந்த குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாண்டிக்குடி , பூலத்தூர், ஆடலூர், பாச்சலூர், கொடைக்கானல், பூண்டி, கிளாவரை என கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிப்பு செய்யப்பட வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தாண்டிக்குடி பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்து சில சமயங்களில் காணாமல் போவதாகவும், குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிக்கு புதிதாக விடப்பட்ட அரசு பேருந்துகள் வருவதில்லை. அதற்கு பதிலாக பழைய பேருந்துகள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சில தினங்களிலேயே அரசு பேருந்து பழுதாகி நின்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற பிரச்சனைகள் நடக்காமல் இருக்க அரசு பேருந்து பணிமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் அவர்களுடைய பணிகளை சரிவர செய்ய வேண்டும். அப்படி செய்யாத காரணத்தால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மலைப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் பழுதடையாமல் இருக்க அவ்வப்போது பேருந்துகளை சரிபார்க்க வேண்டும். டயர்கள் பஞ்சர் ஆனாலும் உடனடியாக டயரை மாற்றும் வகையில் ஸ்டெப்னிகள் பேருந்தில் பொறுத்தப்பட வேண்டும். மலைப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். காட்டு விலங்குகள் அதிகம் நடமாடும் இடங்களில் பேருந்து பழுதாகி நிற்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.
இதுசம்பந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும் இப்பகுதிக்கு தரமான பேருந்துகளை இயக்க வேண்டுமென தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான கணேஷ் பாபு என்பவர் தெரிவிக்கின்றார்.
கா. சாதிக்பாட்ஷா