ஆவடி மாநகராட்சியில் ஆக்டிவ் கவுன்சிலர் ஆனாரா சத்யா கோ. ரவி..!?
ஆவடி மாநகராட்சியில் 40 வது வார்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் சத்யா கோ.ரவி தனது வார்டில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில நாட்களாக குப்பைகள் சேகரிக்கும் வண்டிகள் பழுதானதால் குப்பைகள் சேகரிக்காமல் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் உடனடியாக குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள் என தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பராமரிப்பு நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடியாக அப்பகுதி மக்களை அழைத்துச் சென்று ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டதால், பழுதான குப்பைகள் சேகரிக்கும் வண்டிகளை சரிசெய்ததோடு, இனி அந்த பகுதியில் குப்பைகளை சேகரிக்க நான்கு வண்டிகளும், எட்டுப் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும் அன்றைய தினமே மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனது வார்டில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கும் இடங்களில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை வைத்து கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்து துர்நாற்றம் வீசாமல் சுத்தம் செய்துள்ளனர். இதனால் மாமன்ற உறுப்பினர் சத்யா கோ. ரவியை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.