பல்லடத்தில் பார் ஊழியர் கொடூர கொலை.. திண்டுக்கல் போலீசார் அதிரடி விசாரணை..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் முருகன். மகாலட்சுமி நகர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம் உட்பட 5 இடங்களில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி காமநாயக்கன்பாளையம் பாரில் ரூபாய் 4000 காணாமல் போனதை அடுத்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது அங்கு வேலை செய்த போடியை சேர்ந்த முத்து என்பவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பார் உரிமையாளர் முருகனை தகாத வார்த்தையில் பேசியதை அடுத்து முத்துவை காரில் ஏற்றி மகாலட்சுமிநகரில் உள்ள மதுரை மண்பானை சமையல் ஹோட்டலுக்கு கொண்டு சென்று சக ஊழியர்களுடன் சேர்ந்து முத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கொடூரமாக தலையை அறுத்தும், முகத்தை சிதைத்தும் கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து முத்துவின் சடலத்தை காரில் வைத்து திண்டுக்கல்மாவட்டம் அம்மையநாயக்கனூரில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் உடலை வீசிவிட்டு தப்பியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்படதாக அம்மையநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டது போடி சொக்கலிங்கம் நகரை சேர்ந்த கணேசன் என்பரது மகன் முத்து(32) என்பதும் தெரிய வந்தது.
அதன்பிறகு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய பார் உரிமையாளர் முருகன் மற்றும் கோபால் வீராசாமி, மருது செல்வம், கார்த்திக், கவண் மற்றும் டென்னீஸ் ஆகிய ஆறு பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் பணத்தை திருடிய முத்துவை ஆறு பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக முத்துவின் கழுத்தை அறுத்ததோடு முகத்தை சிதைத்து ரயில்வே தண்டவாளத்தில் வீச முடிவெடுத்து பல்லடத்தில் இருந்து காரில் முத்துவின் உடலை எடுத்துச்சென்று அம்மயநாயக்கனூர் ரயில்வே தண்டவாளத்தில் வீசச்சென்றபோது சாலையிலிருந்து ரயில்வே தண்டவாளம் உயரத்தில் இருந்ததால் உடலை கொண்டு செல்லமுடியாமல் பாலத்திற்கடியில் வீசி விட்டு தப்பியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
பார் ஊழியரை 4000 ரூபாய்க்காக கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிடிபட்ட 6 பேரையும் பல்லடம் மகாலட்சுமி நகரில் சம்பவம் நடந்த மதுரை மண்பானை சமையல் ஹோட்டலில் எவ்வாறு கொலை சம்பவம் அரங்கேறிற்றினர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.