இசைஞானி இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் கண்டனம்
இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த படங்களின் பாடல்களை தனது ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த கூடாது என்று வழக்கு தாக்கல் செய்துள்ளார். இளையராஜா இசையமைக்க தேவையான அனைத்து செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தான் செய்துள்ளனர். தயாரிப்பாளர்கள் பணத்தில் உருவாக்கிய பாடல்களுக்கு இவர் எப்படி உரிமை கொண்டாட முடியும் என தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப்படம் தயாராவதற்கு முன் கதையை முடிவு செய்ததும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முன்பணம் கொடுத்து உறுதிப்படுத்துவார்கள். தொழில்நுட்ப கலைஞர்களில் அதிக சம்பளம் வாங்குவதே இசையமைப்பாளர்கள் தான். அதிலும் இளையராஜா வேலை செய்யும் படங்களுக்கு சம்பளத்தை அவர் தான் முடிவு செய்வார்.
தயாரிப்பாளர்களின் பணத்தில் தான் அனைத்து பணிகளும் நடந்தேறும். நியாயமாகப் பார்த்தால் படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் தான் சொந்தம். ஆனால் படத்தின் பாடல்கள் இசையமைப்பாளருக்கு கடந்த காலங்களில் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு.
தயாரிப்பாளரிடம் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் சங்கங்களும் சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. தயாரிப்பாளர்களின் பணத்தில் உருவான பாடலால் பணம் சம்பாதிக்கும் இளையராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் எதுவும் இல்லை.
ஆகையால் தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக செயற்குழுவை கூட்டி இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவெடுக்க வேண்டும் என கின்னஸ் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.