இடிக்கப்படும் டப்பிங் யூனியன் கட்டிடம்.! என்ன செய்தார் ராதாரவி..?.!
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் டப்பிங் ( பின்னணி குரல் பதிவு ) கலைஞர்களுக்கு சொந்தமான சங்கக் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 2011 ஆம் ஆண்டு 47 லட்ச ரூபாய்க்கு அதாவது 40 லட்சம் இடத்திற்கும், 7 லட்சம் அங்கு இருந்த கட்டிடத்திற்கும் கொடுத்ததாகவும், பின்னர் 75 லட்சம் செலவு செய்து புதிய கட்டிடம் கட்டியதாகவும், மொத்தம் ஒரு கோடியே இறுபத்தி ஐந்து லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர் அப்போதைய சங்க நிர்வாகிகள். இதோடு கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சியில் பிளான் அப்ரூவல் வாங்குவதற்கு 75 ஆயிரம் செலவு செய்ததாகவும் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த கட்டிடம் மாநகராட்சியில் பிளான் அப்ரூவல் வாங்கவில்லை என மாநகராட்சியில் புகார் கொடுத்ததின் பேரில் மாநகராட்சி சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி, கட்டிடத்தை பூட்டி சீல் வைக்க இருப்பதாகக்கூறி கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில் நடிகர் ராதாரவி தலைமையிலான நிர்வாகிகள் மாநகராட்சியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ராதாரவியின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், அதற்கு எந்தவித தடையும் இல்லை என நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ராதாரவி தலைமையிலான நிர்வாகம் பொருட்களை அப்புறப்படுத்த இரண்டு மாதகாலம் அவகாசம் வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவால் இடித்து தரைமட்டமாகப்போகும் டத்தோ ராதாரவி வளாகம் அமைந்திருக்கும் இடம் வாங்கியதிலிந்து இன்றுவரை என்ன நடந்தது ? ராதாரவி இந்த சங்கத்தின் பணத்தை வழக்கிற்காக செலவு செலவு செய்தாரா ? அல்லது சொந்தப் பணத்தை செலவு செய்து சங்கத்தை காப்பாற்ற போராடினாரா ? 70 ஆயிரம் செலவு செய்து பிளான் வாங்கியதாக கணக்கில் எழுதியுள்ள அந்தப் பணத்தை யார் எதற்காக எடுத்தார்கள் ? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விரிவான செய்தியாக வரும் இதழில் பார்க்கலாம்……