தமிழகம்

அரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்

இஎஸ்ஐ மருத்துவமனை பொறுப்பு கண்காணிப்பாளர் மதுபிரசாதை
பணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும்.

முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை

அரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்களுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மருத்துவர் மதுபிரசாத்-&ஐ பணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்திடுக – தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா அனுப்பியுள்ள கடிதத்தில்..
சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர் மதுபிரசாத் 2016 முதல் 2019 மார்ச் வரை பொறுப்பு நிலைய மருத்துவராக செயல்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, 2019 மார்ச் முதல் பொறுப்பு மருத்துவமனை கண்காணிப்பாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி இப்பொறுப்புக்கு வந்துள்ளதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் மருத்துவர் மதுபிரசாத் ஈடுபட்டுள்ள விபரங்கள் பொதுத் தளங்களில் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோரிடம் மருத்துவர் மதுபிரசாத் ஆதிக்க சாதி மனநிலையில் பேசியும் செயல்பட்டும் வருகிறார். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கும், பட்டியலினத்தவர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.


கொரோனா காலத்தில் மருத்துவ பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் இஎஸ்ஐ குடியிருப்பை மருத்துவர் மதுபிரசாத் தனது சுயதேவைக்காக பல மாதமாக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு கட்டிடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தியதால்மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ரூபாய் 81 லட்சம் அபராதத் தொகையை செலுத்த கடிதம் அனுப்பியுள்ளது.

2021 டிசம்பர் 7ந் தேதி மருத்துவக் கண்காணிப்பாளர் பணிக்கு கவுன்சிலிங் நடைபெற்றுள்ளது. மருத்துவக் கண்காணிப்பாளர் பணியை கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்த மருத்துவரிடம், ஏற்கனவே மருத்துவர் ஒருவர் மருத்துவ கண்காணிப்பாளர் பொறுப்பை தேர்வு செய்து விட்டார் என்ற காரணத்தை சொல்லி மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடத்தை தவிர்த்து மற்ற பணியிடங்களுக்கு மீண்டும் 2021 டிசம்பர் 8ஆம் தேதி கவுன்சிலிங் நடைபெற்றுள்ளது. ஆனால், கவுன்சிலிங் மூலம் மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட மருத்துவர் கலைச்செல்வியை இன்றுவரை அப்பணியில் ஈடுபட விடாமல் பொறுப்பு மருத்துவ கண்காணிப்பாளராக தொடர்ந்து மருத்துவர் மதுபிரசாத் செயல்பட்டு வருகிறார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்திடம் பொறுப்பு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் மதுபிரசாத் குறித்து பல்வேறு தரப்பினர் புகார்கள் அளித்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவர் மதுபிரசாத் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று 2022 பிப்ரவரி 24 நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2022 மார்ச் 28 மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “மருத்துவர் மதுபிரசாத் மீதுள்ள விசாரணைக்கு புகார் தெரிவிக்க விருப்பமுள்ளவர்கள் கையொப்பம் இடலாம், விருப்பம் இல்லாதவர்களும் புகார் இல்லையென கையொப்பமிட வேண்டும், விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

புகாருக்கு உள்ளாக்கப்பட்ட பொறுப்பு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் மது பிரசாத், உயர் அலுவலராக பணியில் இருக்கும் போது அவரின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்கள் எப்படி வெளிப்படையாக தங்களது புகார்களை எடுத்துரைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் தரப்பு கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கும் உரிமையை தடுக்கக்கூடிய செயலாக அமைந்துவிடும். மேலும் நிர்வாக அலுவலர் தனது சுற்றறிக்கையில் சொல்லியுள்ள விசாரணைக்குழு, மாண்புமிகு நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா என தெரியவில்லை. தெரிவிக்கவும் இல்லை.

எனவே, கடந்த ஐந்தாண்டுகளாக தமிழக அரசு இஎஸ்ஐ மருத்துவமனையில், மருத்துவர் மதுபிரசாத் மீது அரசுக்கு வந்துள்ள பலதரப்பட்ட புகார்களை உரிய முறையில் விசாரிக்க விசாரணைக் குழுவை நியமித்து, உரிய விசாரணை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். விசாரணைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக பொறுப்பு மருத்துவ கண்காணிப்பாளர் பொறுப்புகளிலிருந்து மருத்துவர் மதுபிரசாத் நீக்கப்பட்டு விசாரணை மேற்கொள்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button