தமிழகம்

கோவில் ஆக்கிரமிப்பு நிலம்..
நீதிமன்றம் உத்தரவிட்டும்
நடவடிக்கை எடுக்காத ஆட்சியர்..!

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு விபரங்கள், அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடமையை செய்வதற்குத்தான் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுத்தப்படும் என கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் கோட்டம், செந்துறை தாலுகாவில் கிளிமங்கலம் & பாளையக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தினை அதே ஊரைச் சேர்ந்த மணிவேல், கோவிந்தராசு, பழனியாண்டி, கலியப்பெருமாள் ஆகியோர் அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சித்து வந்ததாக சுப்பிரமணிய சாமி கோவில் டிரஸ்டி மற்றும் கடந்தையார் வகையறாவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட இடம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் டிரஸ்டி மற்றும் கடந்தையார் வகையறாவினர் மாவட்ட ஆட்சியருக்கு கோவிலுக்குச் சொந்தமான பாளையக்குடி கிராமம் சர்வே எண் 167/1, நிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பூஜைகளுக்கு தேவைப்படும் மலர்கள் உற்பத்திக்கு நந்தவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தினை ஆக்கிரமித்து இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு நீதிமன்றம் உத்தரவுப்படி நிலத்தை அளவீடு செய்து அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் கொடுத்துள்ளனர்.

மேலும் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், செந்துறை வட்டாட்சியர், உடையார் பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கும் மனு அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் இது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

இதுசம்பந்தமாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசு துணைச் செயலாளர் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடந்த மாதம் செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமம் கோவில் டிரஸ்டி இராமலிங்கம் என்பவர் மனு மீது நடவடிக்கை எடுப்பதோடு அதன் விபரங்களை அரசுக்குத் தெரியப்படுத்தவும் என கடிதம் அனுப்பியுள்ளார். இதன்பிறகும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் இதுசம்பந்தமாக எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருவதாக இராமலிங்கம் குற்றம்சாட்டுகிறார்.

நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட நிலத்தினை அளவீடு செய்து நான்கு புறமும் எல்லை கல் நட்டு அறிவிப்பு பலகை வைக்குமாறு வட்டாட்சியருக்கு மனு கொடுத்ததோடு அளவீடு செய்ய அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையையும் இராமலிங்கம் செலுத்திவிட்டார். மேற்படி நிலத்தை அளவீடு செய்ய சர்வேயரை நியமனம் செய்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டிய செந்துறை வட்டாட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தினால் அரசு அதிகாரிகள் மீது முதலமைச்சரிடம் புகார் அளிப்பதோடு நீதிமன்ற நடவடிக்கை செல்வதற்கும் தயாராக இருக்கிறார் அறங்காவலர் ராமலிங்கம்.
இதன்பிறகாவது அரியலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? காத்திருப்போம்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button