தமிழகத்தில் முதல்முறையாக கல்வி தொலைக்காட்சி : தொடங்கி வைத்தார் முதல்வர்
மாணவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், பாடங்களை எளிமையாக கற்றுக்கொள்ளச் செய்யவும் கல்வி என்னும் பிரத்யேக தொலைக்காட்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
5 கோடி ரூபாய் செலவில் இந்த தொலைக்காட்சிக்கான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தின் 8-வது தளத்தில் நிகழ்ச்சி அரங்கு, ஒலி மற்றும் ஒளிப்பதிவுக் கூடம், நிகழ்ச்சி தொகுப்புக் கூடம் ஆகியவை தனித்தனியே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கணிதம், அறிவியல், ஆங்கில பாடங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளும், நீட் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பாடங்களும், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு நிகழ்ச்சி என காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மொத்தம் 32 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வித் தொலைக்காட்சி சேவையை தொடங்கி வைத்தார்.
கல்வித்தொலைக்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கல்வித்தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய அதிநவீன கேமராக்கள், தொழில்நுட்ப கருவிகள், ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் வாங்குவதற்கென ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வித் தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். இந்த அலைவரிசை 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்யும்.
வணிக நோக்கில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் போட்டி போடும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் இடம் பெறும்.
பொதுவாக, மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. எனவே, அவ்வப்போது வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்த கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் படிப்புக்கு உதவும் செய்திகளையும், தகவல் களையும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இனி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதை பெற்றோர்களும் ஊக்கப்படுத்துவார்கள். எனவே, கல்வித் தொலைக்காட்சி அலைவரிசையை மாணாக்கர்கள் பார்த்து, அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியப் பெருமக்களும், உங்கள் பெற்றோர்களும் உங்களுக்கு நல்ல வழிகளை காட்டுபவர்கள். தற்போதுள்ள சூழ்நிலையில், மாணாக்கர்கள் பல்வேறு தேவையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்போன்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் தங்கள் நேரத்தை செலவிடாமல், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பயனுள்ள நிகழ்ச்சிகளைக் கண்டு வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும்.
இதன்மூலம் அறிவுசார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்கிட முடியும். படிக்கும்பொழுதே, மருத்துவர், பொறியாளர், விளையாட்டு வீரர், ஆசிரியர், மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், இந்திய ராணுவத்தில் பணியாற்றல், தொழில் முதலீட்டாளராகுதல், வங்கிப் பணியில் அமர்தல் என்று, எதிர்காலத்தில் அடைய வேண்டிய உயரிய குறிக்கோள்களை நாம் சிறு வயதிலேயே கொண்டிருக்க வேண்டும்.
இதனால் படிக்கும் காலங்களில் முழு கவனம் செலுத்தி நமது குறிக்கோளை எய்திட வேண்டும். ஆசிரியர்கள் அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே படித்தால் தேர்வினை மிக எளிதாக எழுதி, அதிக மதிப்பெண்களை பெறமுடியும். நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கலாம். சுவரை வைத்துத்தான் சித்திரம் என்பார்கள், எனவே, படிப்பு மட்டுமன்றி, சிறந்த ஆரோக்கியமான தேகம் நமக்குத் தேவை. எனவே, உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் பள்ளியில் உள்ள நேரங்களில், பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகள், திறன்வளர்ப்பு குறித்த பயிற்சிகள், பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவை இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெறும். இதனை மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்படுவதன் மூலம், கல்வித் துறை சார்ந்த அரசின் அனைத்து செயல்பாடுகளையும், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இயலும்.
மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இந்த புதிய கல்வித் தொலைக்காட்சியினை முழுமையான அளவு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இந்த கல்வி தொலைக்காட்சியை உருவாக்குவதற்கு அரும்பாடுபட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிய முதன்மைச் செயலாளருக்கும், அவருக்கு துணையாக இருந்த பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கும், மற்றவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைக்குக் கல்வி கற்பது சாதாரண விஷயம் அல்ல. தற்போது நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவர்கள் பலர் உண்டு. நாங்கள் படித்த காலம் வேறு, நீங்கள் படிக்கின்ற காலம் வேறு. இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால், அறிவுசார்ந்த இந்த தொலைக்காட்சியை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கின்றோம். இதனை நல்லமுறையில் பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
& நமது நிருபர்