போலி இறப்புச் சான்றிதழ் மூலம் வங்கியில் உள்ள பணம் கையாடல்….
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மா தேவி தாலுகா தெற்கு வீரவநல்லூர் கிராமத்தில் வசித்து வந்த முத்துலெட்சுமி என்ற மூதாட்டியின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை அதே ஊரைச் சேர்ந்த கணபதி என்பவர் போலியான ஆவணங்களை கொடுத்து பணத்தை கையாடல் செய்ததாக கூட்டுறவுத்துறை உயர்அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக நமது செய்தியாளர் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
வீரவநல்லூர் கூட்டுறவு வங்கியில் தெற்கு வீரவநல்லூரைச் சேர்ந்த பகவதியப்பன் மனைவி முத்துலெட்சுமி என்பவர் சேமிப்பு கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து வந்துள்ளார். அவர் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி 35,000 நவம்பர் 3ஆம் தேதி 30,000 என இரண்டு முறை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். பிறகு தெற்கு வீரவநல்லூரில் உள்ள பெத்தை பகுதியில் மயங்கி விழுந்து இறந்து கிடந்துள்ளார். (15.10.2019) இந்த தகவலை அப்பகுதி மக்கள் வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முன்னிலையில் முத்துலெட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கணபதி என்பவர் முத்துலெட்சுமி கடந்த 9.4.2010 அன்றே இறந்து விட்டதாக 15.10.2018 அன்று அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் இறப்புச் சான்றிதழ் பெற்று வீரவநல்லூர் கூட்டுறவு வங்கியில் கொடுத்து முத்துலெட்சமியின் வங்கிக்கணக்கில் இருந்த 65,000 பணத்தை எடுத்துள்ளார். அப்போது வங்கியில் பத்திரத்தில் உறுதிமொழி ஒன்றையும் எழுதிக் கொடுத்துள்ளார். அதில் எனது மாமா மகள் முத்துலெட்சுமி தங்களது வங்கியில் 15.10.2018ல் 35 ஆயிரம் டெபாசிட் செய்துள்ளார். மேலும் 3.11.2018ல் 30 ஆயிரம் டெபாசிட் செய்துள்ளார். அவர் இந்துவாகப் பிறந்து இந்துவாகவே 9.4.2018ல் காலமாகிவிட்டார். அவர் ஏற்கனவே என்னை வாரிசாக நியமித்துள்ளார். ஆகையால் அவரது பெயரில் உள்ள வைப்புத் தொகையை என்னிடம் வழங்கவும், இதனால் எந்தவித வில்லங்க விவகாரமும் ஏற்படாது. ஏதாவது வில்லங்கம் ஏற்பட்டால் என்னிடம் பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள். இதோடு 2010ல் இறந்ததாக 15.10.2018ல் தாசில்தார் வழங்கிய இறப்புச் சான்றிதழையும் இணைத்துள்ளதாக உறுதி மொழிப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
15.10.2010ல் இறந்தவர் 2018ஆம் ஆண்டு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ததாக அவரே கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார். இதைப் படித்த உடனாவது வங்கி ஊழியர்கள் பணத்தை கொடுக்காமல் இருந்திருக்கலாம். முத்துலெட்சுமி 15.10.2019ல் இறந்து கிடந்தபோது வீரவநல்லூர் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் தான் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்கள். அப்போது இந்த விபரங்களை காவல்நிலைய ஆவணங்களில் பதிவும் செய்துள்ளார்கள். ஆகையால் கணபதியின் மோசடிகளுக்கு வீரவநல்லூர் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்தது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இது சம்பந்தமாக அதே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் முகமது அசனார் என்பவர் அனைத்து ஆதாரங்களையும் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அரசு அதிகாரிகளுக்கும் புகாராக அனுப்பியுள்ளார். கணபதி கொடுத்த இறப்புச் சான்றிதழ் உண்மையிலேயே சேரன்மாதேவி தாசில்தார் தான் வழங்கினாரா அல்லது கணபதியே இறப்புச் சான்றிதழை தயார் செய்தாரா என்கிற சந்தேகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து தெளிவு படுத்த வேண்டும்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பார்வைக்கு இந்த தகவலை நாமும் கொண்டு செல்வோம். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தெற்கு வீரவநல்லூர் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா? அரசு அதிகாரிகள் காத்திருப்போம்.
– நமது நிருபர்