ஆவடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறதா…?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட ஆவடி மாநகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என ஆய்வு செய்ததில் பெரும்பாலான வார்டுகளில் திமுக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என தெரிய வருகிறது.
ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில் 358 நபர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியான திமுக சார்பில் 38 பேரும் மீதமுள்ள 10 வார்டுகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர். அதிமுக 47 வார்டுகளில் போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி 28 வார்டுகளில் போட்டியிடுகிறது.
பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசரின் சொந்த தொகுதியான ஆவடி தொகுதி இந்த மாநகராட்சியில் தான் வருகிறது. ஏற்கனவே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தங்குதடையின்றி இந்த பகுதியில் கிடைத்துள்ளதாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை உள்ளதாலும் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள் என தெரிய வருகிறது.
ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக வீரபாண்டியன், பட்டாபிராம் சேகர் ஆகிய இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.துணை மேயராக அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தேர்வு செய்யப் படுவார் என தெரிகிறது. 4 வது வார்டில் ஆசிம் ராஜாவுக்கும், அதிமுக சார்பில் ரமேஷ் என்பவருக்கும் கடுமையான போட்டி நிலவினாலும் இறுதியில் ஆசிம் ராஜாவே வெற்றி பெறுவார் என தெரிய வருகிறது.
35 வது வார்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹிமின் சகோதரி திருமதி மைலாவதி போட்டியிடுகிறார். 31வது வார்டில் அதிமுக சார்பில் ஆர் வி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் சொந்த செல்வாக்கு அதிகம் உள்ளதால் வெற்றி பெறுவார்கள் என தெரிய வருகிறது.
40 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ரவி சத்யா என்பவருக்கும் சுயேட்சையாகப் போட்டியிடும் அக்பர் என்பவருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
13 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் என்பவருக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது. ஆவடி மாநகராட்சியில் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலான வார்டுகளில் அதிகமாக உள்ளது. இந்த வாக்குகள் திமுக கூட்டனிக்கே சாதகமாக இருப்பதால், ஆவடி மாநகராட்சியை திமுக கைப்பற்றும் என தெரிகிறது.