தமிழகம்

ரூ. 1 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் கள்ளநோட்டு : சினிமா கலைஞருக்கு தொடர்பா?

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வடபழனியில் கள்ளநோட்டு விவகாரத்தில் கால்டாக்சி ஓட்டுநரான மோகன்ராஜ் என்பவரை கடந்த 26-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதற்குப் பதில் 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாகக் கூறி இவர் ஏமாற்றியது தெரியவந்தது. கள்ளநோட்டுகள் என எளிதில்கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவை அச்சடிக்கப்பட்டிருந்தன.
மோகன்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கள்ள நோட்டுகள் வருவதாகவும் 1 லட்சம் ரூபாய்க்கு 10 லட்சம் ரூபாய் வரை கள்ள நோட்டுகள் விற்கப்படுவதாகவும் மோகன்ராஜ் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை தேடிவரும் போலீஸார், ஸ்டண்ட் யூனியன் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால், வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். திருச்சியிலும்…
திருச்சி திருவானைக்காவலில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் சிடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளை செலுத்திய நபர்களை கண்டுபிடிக்குமாறு மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவானைக்காவலில் உள்ள இவ்வங்கியின் கிளையில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் (சிடிஎம்)கடந்த 29.8.2018-ல் செலுத்தப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது, அதில் ரூ.6.500 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 13 இருந்தன.
குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைஇதை டெபாசிட் செய்தவர்கள் குறித்த விவரத்தை கண்டறிய முடியாததால், வங்கியின் மேலாளர் விஜயகுரு, இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளைச் செலுத்திய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி.யை ஆய்வு செய்து வருகின்றனர்.
அண்மையில் திருச்சி கே.கே.நகரில் கள்ள நோட்டு தயாரித்தபோது சிக்கிய கும்பலுக்கும், இதற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button