விளாப்பாக்கம் பேரூராட்சி செயல்அலுவலர் போலி ரசீதுகள் தயாரித்து கொள்ளை…? : விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பேரூராட்சிகள் மண்டலத்திற்குட்பட்ட விளாப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சியில் எந்தப் பணிகளும் நடைபெறாமல் பணிகள் நடந்ததாக போலி ரசீதுகள் தயாரித்து அரசுப் பணத்தை கொள்ளையடிப்பதாக அந்தப் பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியில் விசாரிக்கையில்..
விளாப்பாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலராக முத்து என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்பதே இல்லையாம். எப்போது பார்த்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அழைத்திருக்கிறார் என்று காரணம் கூறிவிட்டு பேரூராட்சி அலுவலகத்தில் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிவதையே வழக்கமாக வைத்துள்ளாராம். பேரூராட்சியின் அத்தியாவசியத் தேவைகளுக்காக என அன்றாட போலி ரசீதுகளை தயார் செய்து பணத்தை எடுத்து தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளை இவர் மீது கூறிவருகிறார்கள். விளாப்பாக்கம் பேரூராட்சியின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க வரும் அதிகாரிகளுக்கு தங்கும் வீடுகளில் அறை எடுத்து கொடுத்து சிறப்பான விருந்து ஏற்பாடுகளையும் கொடுத்து அவர்களை சரி செய்து விடுகிறாராம். அதிகாரிகள் வந்து செல்ல சொகுசு கார்களை ஏற்பாடு செய்து கொடுப்பதோடு பணிமுடிந்து திரும்புகையில் பணக்கவர்களையும் அவர்களிடம் கொடுத்து அனுப்புகிறாராம். பேரூராட்சியின் செயல்அலுவலர் முத்து செய்யும் அனைத்து தில்லுமுல்லுகளுக்கும் கணக்கு தணிக்கை அதிகாரிகள் துணைபோவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதேபோல் விளாப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் வீடு, கடை, பள்ளி, கல்லூரிகள் கட்டுமான பணிகளுக்கு பில்டிங் அப்ரூவல் வழங்குவதற்கு கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அரசுக்குச் சேர வேண்டிய கட்டணத்தை குறைத்து மதிப்பிட்டு பில்டிங் அப்ரூவல் வழங்கி வருவதாக கூறுகிறார்கள். பேரூராட்சியில் சுகாதாரப் பணிகளுக்கு தினசரி பயன்படுத்தும் குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனங்களை பழுது பார்த்தது, அவற்றிற்கு டீசல் போட்டது என போலியான கணக்குகளை எழுதி பணத்தை கையாடல் செய்து வருவதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பொதுமக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. கொரோனா காலத்தில் பேரூராட்சிக்கு ஒதுக்கிய நிதியை சரியான முறையில் மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்யாமல் மேலும் மாவட்ட பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை கொடுத்து பெருந்தொகையை இவர் எடுத்துச் சென்று விட்டதாக கூறிவருகிறார்கள்.
பேரூராட்சிக்குத் தேவையான பினாயில், பிளீச்சிங் பவுடர், துடைப்பம், குப்பை ஏற்றிச் செல்லும் வாகனம் பழுது பார்க்கும் வேலைகள் எனக் கூறி அப்பகுதியில் உள்ள சில நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கியது போல் போலி ரசீதுகளை தயார் செய்து வாங்குகிறார்கள் என பேரூராட்சி அலுவலர்களே கூறுகிறார்கள். விளாப்பாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலர் முத்து ஏற்கனவே பணியாற்றிய இடங்களிலும் இதேபோல் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் தான் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மக்களுக்கு பணியாற்றும் அரசு அதிகாரிகள் எத்தனையோ பேர் நேர்மையாக பணிபுரிந்து எளிமையாக வாழ்ந்து வரலாறு படைத்த தமிழகத்தில் தான் இவரைப் போன்று மக்களின் வரிப்பணத்தில் வசதியான வாழ்க்கை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். இவரைப் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் விளாப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
– சூரிகா