விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏன் ?
விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற பத்தாம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக, இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் தெருக்களில் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னெச்சரிக்கை மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை விளக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் ஹிந்து மத அமைப்புகள், விநாயகர் சிலை செய்யும் சிற்பிகள் என பலதரப்பட்ட பொதுமக்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கூறுகையில், விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு இதற்கு மறுபரிசீலனை செய்து உடனடியாக தடையை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம் என இந்து மத அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
மேலும் விநாயகர் சிலை செய்யும் சிற்பிகள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்து சிலைகளை வடிவமைத்து உள்ளதாகவும், விநாயகர் சிலை தடை விதித்தது என்பது எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 10 கோடி அளவிற்கு சிலை செய்பவர்களுக்கு இழப்பு ஏற்படும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்து கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை வைக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்து அமைப்புகள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை அரசாங்கத்திற்கு தெரியப் படுத்துவோம். அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தடையை மீறி விநாயகர் சிலையை வைப்போர் மற்றும் ஊர்வலம் செல்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலாலே தான் விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது என சட்டப் பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, “விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்“, என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “மத்திய அரசு உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா மூன்றாம் நிலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்க வலியுறுத்தி இருக்கிறார்.
அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தடை விதித்திருக்கிறது.
நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த பரிசீலனை செய்யப்படும் என்றார்.
அதேபோல, உங்கள் கோரிக்கை அனைத்தையுமே நிறைவேற்றி கொடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதிப்பதை ஏற்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
– உதுமான்அலி