பைக்கின் விலை 5,000 : 3 கோடி வசூல்வேட்டை நடத்திய ஆர்.கே.செல்வமணி..!
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றைரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகமே முடங்கி இருக்கும் நிலையில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (பெப்சி) மட்டும் பரபரப்பாக, அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளால் இயங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்றியது போல் இந்த ஆட்சியில் ஏமாற்ற முடியாது என்கிற பயம் ஒருபுறம் இருந்தாலும், கொஞ்சம் கவனமாக தவறு செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம் பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி.
கொரோனா ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் உயிர்களைப் பறித்தோடு, பல்வேறு பாடங்களை உணர்த்தியிருக்கும் நிலையில், பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மீது கிளம்பும் குற்றச்சாட்டுகள் மட்டும் அடங்காமல் வந்த வண்ணம் இருக்கிறதே என்ன காரணம் என்று விசாரித்த போது, பெப்சியின் உறுப்பினர்களும், தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும் நம்மிடம் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெப்சியில் இருந்து அனைத்து சங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் கொரோனா தொற்றின் காரணமாக உறுப்பினர்கள் வேலை இல்லாமல் வறுமையில் இருக்கிறார்கள். உறுப்பினர்களின் நலன் கருதி தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எலக்ட்ரிக் பைக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், உறுப்பினர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெப்சியில் பணத்தை கட்டுமாறு தேதியை நிர்ணயித்திருக்கிறார்கள். பைக்கின் விலை 5,000/& முதல் 7,000/& என விளம்பரமும் செய்தார்கள்.
பெப்சியில் இணைந்திருக்கும் 24 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் கிடைக்கிறதே என்ற ஆசையில் வடபழனி நூறடி சாலையில் அமைந்துள்ள பெப்சியின் அலுவலகத்தில் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களை பார்வையிட்டு கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணத்தை கட்டியிருக்கிறார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் கம்பெனி பெயர்கள் ஏதும் இல்லாத விபரங்களை யாரும் கேட்கவில்லை. 5000 ரூபாய்க்கு பைக் எப்படி கொடுக்க முடியும் என ஒரு சில உறுப்பினர்கள் கேட்ட போது, வேலை செய்யும் பெண்களுக்கு பைக் வாங்குவதற்கு ரூ.25,000 தமிழக அரசு மானியத்தடன் வங்கிக் கடன் வழங்குகிறது. அந்த திட்டத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு பைக் வழங்க அரசாங்கத்திடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறோம் என்று பேசி தொழிலாளர்களை நம்ப வைத்திருக்கிறது செல்வமணி அன் கோ. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் வரை செல்லும் பைக்கின் விலை 5000 எனவும், 100 கிலோ மீட்டர் வரை செல்லும் வாகனம் 7,000 எனவும், கூறி அப்பாவி சினிமா தொழிலாளர்களிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளார்கள்.
சினிமா தொழிலாளர்களிடம் எலக்ட்ரிக் பைக் குறைந்த விலையில் தருவதாக கூறி பணத்தை வசூல் செய்த போது வங்கியின் வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ வாங்கமால் பணமாக மட்டுமே வாங்கி அரசுக்குச் சேர வேண்டிய டிடிஎஸ் வரிப்பணத்தையும் ஏமாற்றியிருக்கிறார்கள். மோசடி நிறுவனங்கள் தான் பணத்தை மட்டும் வசூல் செய்து மக்களை ஏமாற்றுவார்கள். அதே போல் பெப்சியும் பணத்தை வசூல் செய்திருக்கிறது.
தொழிலாளர்கள் பணம் செலுத்திய ரசீதை வாங்கி அதில் உள்ள விபரங்களை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது. கிராண்ட் யூகோ என்ற நிறுவனத்துடன் பெப்சியின் தலைவர் செல்வமணி ஒப்பந்தம் போட்டிருக்கிறார். கிராண்ட் யூகோ கம்பெனி வேலப்பன் சாவடியில் ஒரு சிறிய அலுவலகத்தில் இயங்கி வருகிறது. அந்த கம்பெனியின் பெயரில் உள்ள இணையதளத்தில் வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று தான் உள்ளது. இந்த கம்பெனிக்கு இதுவரை பேக்டரி எதுவும் தற்போது வரை கிடையாது. இனிமேல் தான் தூத்துக்குடியில் இடம் வாங்கி அதுவும் கார் கம்பெனி ஆரம்பிக்கப் போவதாக தான் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். வேலப்பன்சாவடியில் இயங்கி வரும் கிராண்ட் யூகோ கம்பெனிக்கு இரு சக்கர வாகனம் தயாரிக்கும் பேக்டரி எதுவும் இல்லை. அந்த அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்த போது நவம்பரில் தான் பூந்தமல்லியில் அலுவலகம் துவங்க உள்ளோம். தூத்துக்குடியில் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி பைக் தயாரிப்பு பேக்டரி ஆரம்பிக்க உள்ளோம் என்கிறார்கள்.
பெப்சியில் நிறுத்துப்பட்டிருந்த பைக்கின் படங்களை இதுவரை கிராண்ட் யூகோ வெப்சைடில் பதிவு செய்யவில்லை. அந்த பைக் ஹரியானா மாநிலத்தில் உள்ள யுவேக்கஸ் என்ற கம்பெனி தயாரித்த பைக்கை கிராண்ட் யூகோ கம்பெனி தனது தயாரிப்பாக காட்டி தொழிலாளர்களிடம் பணம் வசூல் செய்திருக்கிறார்கள். வேலை செய்யும் பெண்களுக்கு கடந்த அதிமுக அரசு வழங்கிய 25,000/- மானயத்துடன் வங்கிகளின் மூலம் பைக் வழங்கும் திட்டத்தில் மோசடி செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் தான் சினிமா தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய்க்கு பைக் வழங்கும் திட்டம் என்கிறார்கள். மூத்த சினிமா தொழிலாளர்கள், பெப்சியில் பணம் கட்டியவர்கள் அனைவரும் சினிமா தொழிலாளர்கள் தானா என்று விசாரித்தால் தொழிலாளர்களின் உறவினர்கள், அவர்கள் குடியிருக்கும் உரிமையாளர்கள் போன்றவர்கள் தான் அதிகம்.
சினிமாத் தொழிலளர்களிடம் வசூல் செய்த பணம் தற்போது செல்வமணி வசம் உள்ளதா? அல்லது கிராண்ட் யூகோ கம்பெனியிடம் உள்ளதா? பணம் செலுத்திய உறுப்பினர்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கியிருக்கிறார்களா? பைக் எப்போது உறுப்பினர்களுக்கு வழங்குவார்கள் என்ற பல்வேறு கேள்விகளை தொழிலாளர்கள் எழுப்புகிறார்கள்.
தொழிலாளர்களிடம் வசூல் செய்த பணத்திற்கு யார் உத்திரவாதம் தருவார்கள்? கிராண்ட் யூகோ கம்பெனியின் உரிமையாளர்கள் யார்? அந்த நிறுவனத்தின் டிஸ்ட்ரிபூயுட்டர்ஸ் யார்? தயாரிப்பு நிறுவனம் எங்கு உள்ளது என்று எதுவுமே தெரியாமல் தொழிலாளர்கள் பணத்தை பெப்சியில் செலுத்திவிட்டு தற்போது பைக் வருமா? என்ற சந்தேகத்தில் காத்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட காலத்தில் பைக் வழங்காததால் தமிழக அரசு தலையிட்டு தீவிரமாக விசாரணை செய்து ஆரம்பிக்காத கம்பெனி பெயரில் பணம் வசூல் செய்த பெப்சியின் தலைவர் செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
செல்வமணி மீது அரசிடம் வாங்கிய 5 கோடி பணத்தை முறையாக செலவு செய்தாரா? நிவாரணத் தொகையை செலவிட்டதற்கு முறையான கணக்கு காட்டவில்லை. பொருட்கள் வழங்கியதில் ஊழல் போன்ற பல்வேறு புகார்களுக்கு மத்தியில் தற்போது எலக்ட்ரிக் பைக் வழங்குவதாக பணம் வசூல் செய்து பல மாதங்களாகியும் இன்று வரை பைக் வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் சேர்ந்துள்ளது.
ஆரம்பிக்காத கம்பெனி பெயரில் பல கோடி பணத்தை வசூல் செய்து கொண்டு உல்லாசமாக வலம் வரும் பெப்சியின் தலைவர் செல்வமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு புதிய நிர்வாகத்தை அமைக்காத வரை அப்பாவி சினிமாத் தொழிலாளர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
– சூரியன்