தேனியில் மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற 900 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் 120க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 280க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பொது நலப் பிரிவு தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு,மகப்பேறு பிரிவு, ரத்தவங்கி, ஸ்கேன் சென்டர், எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டர் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.
இங்கு, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் தேனி திண்டுக்கல், மதுரை மாவட்டம் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன் படுத்தப்படுகின்ற ஊசி மருந்து கழிவுகள் மற்றும் பொதுமக்கள் வளாகப் பகுதியில் பயன்படுத்தி போடுகின்ற ஏனைய கழிவுகளை நாள்தோறும், மருத்துவமனை வளாகப் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, திருமலாபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் மூலமாக குப்பை கழிவுகளை மாற்று இடத்திற்கு அப்புறப் படுத்தி வந்தனர்.
ஒரு சமயம் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியா புரம் செல்லும் மலைச்சாலை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், மருத்துவ கழிவுகளை கொட்டினர்.
அப்போது அம்மச்சியாபுரம் மரிக்குண்டு வீரசின்னம்மாள் புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், கழிவுகளை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் மாசடையும், கழிவுகளால் துர்நாற்றம் வீசும், சுகாதாரக் கேடு ஏற்படும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டராக இருந்த பல்லவி பல்தேவியிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக பவுன்ராஜ் மற்றும் விவசாய சங்கத்தின் சார்பாக சீனி ராஜ் ஆகியோர் தலைமையில் மனு வழங்கப்பட்டு, அதற்கு பின்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டாமல் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் இப்பகுதியில் மருத்துவ கழிவுகளை போலீஸ் பாதுகாப்புடன் கொட்ட வந்த வாகனங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகரனிடம், இப்பகுதியில் இந்த கொரோனா காலத்தில் மருத்துவ குப்பை கழிவுகளை கொட்டுவதால் 50 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் அவர்களின் எதிர்ப்பையும் மீறி குப்பை கழிவுகளை கொட்டி விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கூறுகையில்,
பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு பாதுகாப்பாக வருகின்றனர். ஏன் என்று கேட்கச் சென்றால் அடித்து மிரட்டுகின்றனர்.இங்கு குப்பை கழிவுகளை கொட்டுவது சம்பந்தமாகப் பேச வேண்டும் என்று, வட்டாட்சியர் வேறொரு இடத்திற்கு( எங்களை திசை திருப்பிவிட்டு) வர சொல்லிவிட்டு, திடீரென மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றனர்.கழிவுகளை நீண்ட தூரம் கொண்டு வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே இங்கு மருத்துவ கழிவுகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கியதை அடுத்து இப்பகுதியில் மருத்துவ குப்பை கழிவுகளை கொட்டவில்லை. தற்போது கொரோனா நோய் பரவி வரும் சூழ்நிலையில் இங்கு கொட்டப்படும் மருத்துவமனை குப்பைகள் காற்றின் மூலம் பரவி பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பொது மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு தற்போது காவு வாங்கக் காத்திருக்கிறது.
நோய் வந்தவர்கள் தான், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குசெல்ல வேண்டும். ஆனால் மருத்துவமனை மூலம் ( மருத்துவக் கழிவுகளால்) தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஊசி. மருந்து, மனித உறுப்புகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவக்கல்லூரி, விடுதிகள், மற்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்களின் உணவு, உடை உள்ளிட்ட சாதரணப் பொருட்களின் கழிவுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு தான், தற்போது அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மற்றபடி மருத்துவக்கழிவுகள் ஏதும் திறந்த வெளியில் கொட்டப்படவில்லை என்று பேசினார் இது சம்பந்தமாக பொதுமக்களிடம் கேட்கையில் நிர்வாகத்தினர்குற்றத்தை மறைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
ராஜசிம்மன்.