இந்தியாவிற்கே வழிகாட்டியாக மதுரை அரசு மருத்துவமனைகள்
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மாவட்டத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் அரசு கொரோனா அரசு மருத்துவமனை, திருமங்கலம், பேரையூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, மேலூர், அரசு மருத்துவமனைகளிலும் ரயில்வே மருத்துவமனை என 6 மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
இதில் அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் ஜூலை மாதத்தில் 6,000 லிட்டர் திரவ ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. இந்நிலையில் டி&சிலிண்டர் எனப்படும் ஆளுயர ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலமாக 30 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தபட்டிருந்தது. இதனால் அதனை அதிகரிக்க முதலாம் கட்ட கொரோனா பரவலின்பொழுதே செப்டம்பர் மாதத்தில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டு அதன் மூலமாக 842 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் இணைப்புக் கொடுக்கப்பட்டுவிட்டது.
“கொரோனாவின் முதல் அலை பரவ ஆரம்பித்தபோது, கடுமையான நோய்த் தொற்றுடன் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜாகிர் ஹுசைன். ஏப்ரல் முதல் மே மாதத்தின் நடுப்பகுதி வரை அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 70 சதவீதம் அளவுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அவர் சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 45 நாட்கள் அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட மொத்த ஆக்சிஜன் அளவு, சுமார் 45 லட்சம் லிட்டர். 45 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் பெற்றார். கொரோனா தாக்கினால் என்ன சிகிச்சை அளிப்பது என்று முழுமையான நெறிமுறைகள்கூட உருவாகாத காலகட்டத்தில் இது நடந்தது. அந்தத் தருணத்தில்தான் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தோம்“ என்கிறார் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன்.
அந்தத் தருணத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக மதுரை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார் டாக்டர் சந்திரமோகன். அவரும், மாவட்ட ஆட்சித் தலைவர் வினய், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் கலந்தாலோசித்து, உடனடியாக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் அளவை அதிகரிப்பது என முடிவுசெய்தனர்.
இதேபோல் மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனை முழுமையான கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் பொருத்தப்பட்டு 140 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாநகர் அரசு கொரோனா மருத்துவமனையில் 1,542 படுக்கைகளில் 848 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளன. இதில் தீவிர சிகிச்சை பிரிவில் 245 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி 310 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய நிலையில் 538 படுக்கைகள் காலியாக உள்ளது.
இங்கு நாள்தோறும் வரும் கொரோனா நோயாளிகள் ஒரு நிமிடம் கூட ஆக்சிஜன் இல்லாத சூழலில் உயிர் இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் கடைசி நேர உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் ஜீரோ டிலே ( Zero Delay) என்ற சிகிச்சையானது அறிமுகப்படுத்தப்பட்டு நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுவரப்பட்டு அவர்கள் மருத்துவமனை படுக்கைக்கு கொண்டுசெல்லும் வரை தேவையான ஆக்சிஜனை கொடுக்கும் வகையில் நோயாளிகளை கொண்டுசெல்லும் அனைத்து ஸ்டெக்சர்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் பொறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று நோயாளிகள் கழிவறைக்கு செல்லும் போதும் உயிரிழப்பை தவிர்க்கவும் கொரோனா மருத்துவமனை கழிப்பறைகளிலும் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஏராளமான உயிரிழப்புகளை தவிர்க்க முடிகிறது. இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் அரசு தனியார் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லாத நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் போதிய அளவிற்கான ஆக்சிஜன் கொள்கலன்களை முன்னெச்சரிக்கையாக நிறுவிய நிலையில் ஆக்சிஜன் தங்குதடையின்றி வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் அரசு கொரோனா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் கொள்கலன்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது. இதில் கசிவு ஏற்படாத வகையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு கொரோனா மருத்துவனை மற்றும் தோப்பூர் கொரோனா மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையை வழங்கி உயிரை பாதுகாப்பதில் தனியார் மருத்துவமனையை மிஞ்சி நிற்கிறது.
– ரபீக் அகமது