தமிழகம்

நாக்கை அறுத்துக் கொண்ட பெண் : ஒருபோதும் உடலைச் சிதைக்காதீர்கள் : வருந்திய மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

இதையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். கொரோனா தொற்று காரணமாக பதிவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்றும் ஸ்டாலின் கூறினார். முதன்முறையாக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்றுள்ளதாதல் அவர்கள் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராகி உள்ளதால் பெண் ஒருவர் நாக்கினை அறுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32). இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசல் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல் படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின் பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.

நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள்.

அது எனக்கு வருத்தத்தையே வர வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வெ.சங்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button